விஷமிகளின் தீ வைப்பால் எரிந்து சாம்பலான  செல்வபாக்கியம் பண்ணை வைக்கோல் பட்டறை (Photos)

1422

தமிழர் தாயகத்தில் மாடு வளர்ப்பின் அடையாளமாக விளங்கும் நேசன் அவர்களது செல்வபாக்கியம் பண்ணையின் மூன்று வைக்கோல் பட்டறைகள் இன்று விஷமிகளால் தீ வைக்கப்பட்டதில் எரிந்து சாம்பலாகியுள்ளன. 

அவற்றின் பெறுமதி ஒரு இலட்சத்து ஏழாயிரம் என உரிமையாளர் தெரிவித்தார்.  

முன்னாள் போராளிகளான நேசனும் அவர் மனைவியும் கடந்த ஆறு வருடங்களாக பண்ணையினை திறம்பட நடத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கைவேலி புதுக்குடியிருப்பில் உள்ள பண்ணையின் உரிமையாளரான செல்வநேசன்    இன்று காலை  10.30  மணியளவில் மாட்டு தீவனங்களான கடலைப்பருப்புக் கோது, உளுத்தங்கோது, தவிடு போன்றவற்றை கொள்வனவு செய்ய புதுக்குடியிருப்புக்கு சென்றிருக்கிறார்.

இந்நிலையில் 11.20 மணியளவில் வைக்கோல் பட்டறை எரிந்து கொண்டிருப்பதாக அவரது மனைவி தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.    உடனடியாக அவர் திரும்பி வந்து பார்த்த போது தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. தீ வீட்டுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிராமசேவையாளருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதும் வைக்கோல் பட்டறை தொடர்ந்தும் புகைந்து வருகிறது.  

இது தொடர்பில் உரிமையாளர் நேசன் கருத்து தெரிவிக்கையில், 

2014 ஆம் ஆண்டு ஒரு மாடு கன்றுடன் இந்தப் பண்ணையை ஆரம்பித்தேன். பல்வேறு நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் தற்பொழுது 18 மாடுகளுடன் பண்ணையினை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றேன். இந்தப் பண்ணைக்கு நேரடியாக வந்து 4500 க்கும் மேற்பட்டவர்கள் மாடுவளர்ப்பு தொடர்பில் பயிற்சி பெற்று  சென்றுள்ளார்கள். தற்போது 35 வகையான இயற்கை விவசாய உள்ளீட்டு கரைசல்களையும்  தயாரித்து வருகின்றேன். அது தொடர்பிலும் பயிற்சிகளை வழங்கி வருகின்றேன்.  

தற்பொழுது வறட்சி காலம் தொடங்கியுள்ளது. அதனையும் விட கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடர் ஊரடங்கு நிலமையால் மாடுகளுக்கான ஏனைய   தீவனங்களும் வரத்து நின்று போயுள்ளதால் உணவுத்தேவைக்கு பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. 

இதற்கு முன்னரும் அயலில் உள்ளவர்களால் மாட்டுக்கு விஷம் கொடுத்து கொன்ற சம்பவமும் நடந்தது. பண்ணைக்கு கல்லெறிகின்ற சம்பவங்களும் முன்னர் இடம்பெற்றன. இது தொடர்பில் பல தடவைகள் கைவேலி பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறேன். வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இப்படியான தொடர் மனவுளைச்சல்களால் இந்தப் பண்ணையை கொண்டு நடத்துவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்படும் நெருக்குதல்களால் பொருளாதார ரீதியாகவும் பெரும் சரிவை சந்தித்துள்ளேன்.

எனது வைக்கோல் பட்டறைக்கு தீ வைத்தவர்கள் இனம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் . அதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  
 

தொடர்புக்கு: 0770610698