பட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்காக கோத்தபாய அரசினால் 45000 பயிலுனர்களுக்கான நியமனங்களுக்கு உள்வாங்கப்பட்டவர்களை கொரோனா ஒழிப்பு பணிக்காக ஈடுபடுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு கடிவாளம் போட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆள்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் பட்டதாரிப் பயிலுனர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பட்டதாரிப் பயிலுனர்களை பணிக்கு அமர்த்துவது தேர்தல் சட்டத்துக்கு விரோதமானது. இதனை நிறுத்துமாறு இம்மாதம் 3 ஆம் திகதியே கடிதம் அனுப்பி இருந்தோம். இதன் பின்னரும் அப்படி முயற்சிப்பதானது தேர்தல் சட்ட மீறலாகவே கருதப்படும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆள்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் என அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.