பனை ஓலை மாஸ்க் தயாரிப்பில் அசத்தும் தம்பதியினர் (Video)

உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டின் கோவில்பட்டியை சேர்ந்த பனையேறும் தொழில் செய்யும் குடும்பத்தினர் பனை ஓலையை மாஸ்க்காக தயாரித்து விற்று வருகின்றனர்.

உலகினை அச்சறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு இது வரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் அதனை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். தனித்து இருந்தால், கைகளை நன்றாக கழுவுதல், முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பினை தொடர்ந்து முககவசத்தின் விலையும் அதிகளவில் உயர்ந்து விட்டது, மேலும் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. ஒரு முக கவசம் ரூ.30, 40, 50 என இஷ்டம் போல் விலையேற்றத்தை சந்தித்துள்ளன. இந்த விலை கொடுத்து முக கவசம் வாங்குவது என்பது ஏழைகளுக்கு சாத்தியம் இல்லாத நிலையில் ஒரு சிலர் கைக் குட்டை, டவல் ஆகியவற்றை முகத்தில் கட்டிச் செல்வதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூர் கு.சுப்பிரமணியபுரத்தினை சேர்ந்த பனையேறும் தொழில் செய்யும் குணசேகரன், முருகலட்சுமி தம்பதியினர் பனை ஓலையையே மாஸ்க் ஆக மாற்றி அணிந்து அசத்தி வருகின்றனர். பனைத் தொழில் என்பது ஒரு ஆண்டில் 4 முதல் 6 மாதங்கள் வரை தான் இருக்கும். பனையில் பாலை வந்து அதை பக்குவப்படுத்தி இடுக்கி சீவி விட்டால் தான் பதநீர் இறக்கி கருப்பட்டி தயாரிக்க முடியும். அந்த பாளையை ஒரு நாள் சீவாமல் விட்டாலும் காய்ந்து விடும், பதநீர் இறக்க முடியாது.

குளத்தூர் முதல் வேம்பார் வரை 3000 பனை தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தொழிலையும் கை விட முடியாத இவர்கள் துணி மாஸ்க்கை தேடாமல் பனை ஓலையில் முகக்கவசம் தயாரித்து, அதை அணிந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இப்பகுதி பனை தொழிலாளர்கள் மாஸ்க் வாங்க வேண்டும் என்றால் விளாத்திகுளம், கோவில்பட்டி, தூத்துக்குடி நகரங்களுக்கு தான் செல்ல வேண்டும், இதனால் என்ன செய்யலாம் என்று யோசனை செய்த குணசேகரன், முருகலட்சுமி தம்பதியினர் பனை ஓலையையே ஏன் முககவசமாக பயன்படுத்த கூடாது என்ற எண்ண தொடங்கியது விளைவு தான் பனை ஓலை மாஸ்.

இவர்கள் பனை ஓலையில் மாஸ்க் செய்து அணிந்து கொண்டு, வேலைகள் செய்வதை பார்த்த மற்ற பனை தொழிலாளர்கள், மற்றும் கிராம மக்கள் ஆர்வமுடன் பனை ஓலை மாஸ்க்கை வாங்கி செல்கின்றனர். இதனை தொடர்ந்து ஏன் தங்களது வருமானத்திற்கு இதனை பயன்படுத்த கூடாது என்று நினைத்த தம்பதியினர் குடும்பத்தினருடன் இணைந்து பனை ஓலை மாஸ்க் செய்து ஒரு மாஸ்க் 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

துணியினால் செய்ய்படும் மாஸ்க்கினை விட இது இயற்கையான மாஸ்க் என்பதால் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பனையேறும் தொழிலாளர்கள் தங்களின் பனை ஓலையையே மாஸ்க் ஆக மாற்றி அணிந்து அசத்தியுள்ளனர்.

கொரோனாவினால் தங்களது வாழ்வாதரத்திற்கு என்ன செய்வது என்று வேதனையுடன் இருந்த இந்த தம்பதியினருக்கு பனை ஓலை மாஸ்க் இன்று கைகொடுத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.