கனடாவில் தமிழ் வைத்தியரும் லண்டன் தமிழரும் கொரோனாவுக்கு பலி

கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ் வைத்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார். Ontario மாகாணத்தின் Kingston வைத்தியசாலையின் ஆலோசகரான இவர் மரணமடைந்துள்ளார்.

ஏற்கனவே வைத்தியர் கடமையில் இருந்து இளைப்பாறிய இவர், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மீண்டும் கடமையில் இணைந்து கொண்டிருந்தார்.

சில வாரங்கள் கொரோனா வைரஸ் நோயர்களுக்கு சிகிச்சையளித்து வந்த இவரும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.

லண்டன் தமிழரும் மரணம்

லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் – மீசாலை மேற்கை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி சியாமளன் என்ற 42 வயதான குடும்பஸ்தராவர்.

நேற்று முன்தினமிரவு இவர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் குடும்ப வைத்தியரான டொக்டர் எஸ்.சிவராஜ் தெரிவித்துள்ளார்.

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒரு மகனுக்கு 2 வயதும், மற்ற பிள்ளை பிறந்து 6 மாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.