அத்தியாவசிய உணவுப் பொருள்களுடன் இறைச்சிக் கோழியும் வழங்கிய  உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம் (Video)

2016

கனடா வாழ் உறவுகளின் நிதி உதவியில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்டி தெற்கு கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
 
உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம் கனடாவின் ஏற்பாட்டில் தாயகத்தில் உள்ள உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஊடாக உடுப்பிட்டியில் வாழும் மக்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருள்கள் வழங்கும் நிவாரணப்பணிகள் கடந்த 7, 8, 9 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டன.   

கொரோனா பரவலையடுத்து பிறப்பிக்கப்பட்ட தொடர் ஊரடங்கால்  அன்றாடம் உழைக்கும் வருமானத்தில் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.  அவர்களுக்கு முதற்கட்டமாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.      

அதனைத் தொடர்ந்து அரச, தனியார் துறைகளில் வேலை செய்வோரும் பணம் இருந்தாலும் பொருள்களை  பெற்றுக் கொள்வதில் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருவதைக் கருத்தில் கொண்டு இரண்டாம் கட்டமாக அவர்களுக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.     

உடுப்பிட்டியின் J /352,  J/354 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின்  அளவைப்பொறுத்து  நான்கு பேர் கொண்ட சராசரி குடும்பமொன்றுக்கு 25 கிலோ கோதுமை மா, 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 2 கிலோ சீனி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா என்பன வழங்கப்பட்டன. இவை ஒவ்வொரு குடும்பங்களுக்கும் மூன்று, நான்கு வாரங்கள் போதுமானவையாகும். 


 
கனேடிய உறவுகளால் கொரோனா இடர்கால அவசர நிவாரண நிதியாக சேகரிக்கப்பட்டிருந்த 15 இலட்சம் ரூபாய் வரையிலான நிதியில் இருந்து உலருணவுப்பொதிகள் குறித்த கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன. 

உடுப்பிட்டி நலன்புரிச்சங்கம் கனடாவினால் நிர்வகிக்கப்படும் உடுப்பிட்டி கோழிப்  பண்ணையில் இருந்து குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு இறைச்சிக் கோழி என்கிற அடிப்படையில் 350 க்கும் அதிகமான கோழிகள்  நேற்று 11.04.2020 வழங்கப்பட்டன. 

இந்த மனிதாபிமான செயற்பாடுகளில் உடுப்பிட்டியைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட இளையோர்கள் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் சேவையாற்றி இருந்தனர். 

தாயக உடுப்பிட்டி நலன்புரிச் சங்க செயலாளர் சுஜா கருத்து தெரிவிக்கையில், 

கொரோனா பீதியை அடுத்து பிறப்பிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கால் எம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்த போது, கனடாவாழ் உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தினர் உடனடியாக செயற்பட்டு அங்குள்ள அங்கத்தவர்களிடம் நிதியை உடனடியாக திரட்டி அனுப்பி வைத்தனர்.

“யாருமே இங்கு பசியோடு வாடக் கூடாது அனைவருக்கும் உலருணவு வழங்குங்கள்” என்பது தான் கனடாவிலிருந்து வந்த உடனடி தகவலாகும். 

இங்கேயும் சில பொருள்களுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் நியாயமான விலையில் பொருள்களை இங்குள்ள  பலசரக்கு கடைகளில் கொள்முதல் செய்து அதனை பொதிகளில் பிரித்து உலருணவுப் பொதிகளாக்கும் வேலையில் இங்குள்ள இளையோர் இரவு பகலாக செயற்பட்டனர்.

உலருணவுப் பொதிகளை உழவு இயந்திரத்தில் ஏற்றி ஒவ்வொரு குடும்பத்தினரின் வீட்டு வாசல்களுக்கும் நேரடியாக சென்று விநியோகித்தனர். நான்கு நாட்களாக உலர் உணவுகளை பொதிகளாக்கி உரிய முறையில் கொண்டு சேர்ப்பதில் தன்னலம் கருதாது செயற்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இளையோர்களின் சேவை என்றுமே போற்றுதற்குரியது.

பனிக்குள்ளும், குளிருக்குள்ளும் இரவு பகல் பார்க்காமல் உழைத்து உலகளாவிய இந்த நெருக்கடியான காலத்திலும் இங்குள்ள எம்மக்களுக்கு உதவிய கனடா நலன்புரிச் சங்கத்தினரின் உதவிக்கு தாயகஉடுப்பிட்டி வாழ் மக்கள் என்றும் நன்றிக்கடன் உடையவர்களாவர்.

இப்போது கனடாவிலும் கொரோனா பரவலை அடுத்து பலரும் தொழில்வாய்ப்புக்களும் இழந்துள்ள நிலை பற்றி அறிந்து வேதனையடைகிறோம். எல்லோரும் இந்நிலையில் இருந்து விரைவாக மீள வேண்டும். என்றார்.