புத்தாண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை

இலங்கை முழுவதும் இன்று (ஏப்ரல் 13) திங்கட்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிவரையான 24 மணித்தியாலயங்கள் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

மேலும் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

அத்தியாவசிய நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட தேவைக்கு மாறாக வேறு நோக்கங்களுக்காக அதனைப் பயன்படுத்திய பல சம்பவங்கள் பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

வேறு எந்த நோக்கத்திற்காகவும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக வழங்கப்பட்ட ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்துவது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

பாரம்பரிய புத்தாண்டு தினத்தன்று உறவினர்கள் வீடுகளுக்குச் செல்ல ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களை மக்கள் பயன்படுத்துவதற்கான போக்கு காணப்படுவதால், சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்குச் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.