கொரோனா தடுப்பு கிருமிநாசினியாக கள்: தமிழக அரசுக்கு கோரிக்கை

இந்தோனேஷியாவில் பனைகளிலிருந்து கள் இறக்கப்பட்டு புளித்த கள்ளை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு கிருமிநாசினி தயாரிக்கப்படுவதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மட்டும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கள்ளுக்கு தடை உள்ளது. இந்தோனேஷியா பாலித் தீவில், பனைகளிலிருந்து கள் இறக்கப்படுகிறது. இந்தத் தீவையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அங்கு கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அப்போது புளித்த கள்ளை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு கிருமிநாசினி தயாரித்து, மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது இயற்கையானது என்பதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.

அண்டை நாடுகளிடமிருந்து கிருமிநாசினிக்காக கையேந்த வேண்டிய நிலை இந்தோனேஷியாவுக்கு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் கள்ளுக்கு தடை இருக்கின்ற காரணத்தால் பனை, தென்னைகளிலிருந்து பதநீர் இறக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆக்கப்பூர்வமான செயலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த பேரிடர் நேரத்தில் தமிழ்நாடு அரசு கள்ளிலிருந்து இயற்கையான கிருமிநாசினி தயாரிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.