மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கும் பணி வடக்கில் மீள ஆரம்பம்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், இன்று ஏப்ரல் 20ஆம் திகதிய கடிதத்தின் மூலம் சகல பிரதேச செயலர்களுக்கும் அறிவித்துள்ளார்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தல் படி கடந்த மார்ச் மாதம் தொடக்கம் காலாவதியான மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப் பத்திரங்களுக்கு வரும் மே 31ஆம் திகதிவரை சலுகைக் காலம் வழங்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போதைய கொரோனா வைரஸ் பரம்பல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் நெரிசலை ஏற்படுத்தாத வகையில் மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சகல பிரதேச செயலாளர்களிடமும் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் கேட்டுள்ளார்.

அதன்படி வடக்கு மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரத்தை இன்று முதல் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.