கொரோனாவில் இருந்து மீண்டெழுந்து பி.பி.சி இல் செய்தி வாசிக்கும் ஈழத்தமிழர் (Video)

அனைத்துலக பிபிசி செய்திச்சேவையில் நீண்டகாலம் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வரும் ஜோர்ஜ் அழகையா, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் தொலைக்காட்சியில் செய்தி வாசித்து வருகிறார்.

கொழும்பில் பிறந்த ஈழத்தமிழரான ஜோர்ஜ் அழகையா நீண்டகாலமாக பிபிசியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு உலகெங்கும் ஏராளம் ரசிகர்கள் உள்ளனர்.

அவர் சில காலத்திற்கு முன்னர் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தார்.புற்றுநோயின் நான்காம் கட்ட ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு, வைத்தியர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். ஓரளவு குணமடைந்த நிலையில் தொடர்ந்தும் செய்தி வாசித்து வந்தார்.

அண்மையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றும் ஏற்பட்டிருந்தது. இரண்டு ஆபத்தான நோய்கள் குறித்து வைத்தியர்கள் கவலையடைந்திருந்த நிலையில், 4 வார போராட்டத்தின் பின் ஜோர்ஜ் அழகையா கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் (21) பிபிசியின் மாலை 6 மணி செய்திகளை பழைய மிடுக்குடன் ஜோர்ஜ் அழகையா வாசித்தார்.

அவருக்கு பிரித்தானியாவிலேயே ஏராளம் ரசிகர்கள் இருக்கும் நிலையில், நேற்று பிரித்தானியாவின் முன்னணி செய்திஊடகங்கள் அனைத்தும் ஜோர்ஜ் அழகையாவின் மீள்வருகையை பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.