செந்தூரனின் உடலுக்கு முன்னணியின் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிப்பு (Photos)

2388

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் வலி கிழக்குப் பிரதேச சபையின் உறுப்பினருமான இலகுநாதன் செந்தூரன் அவர்களது இறுதி ஊர்வலம் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இறுகிக்கிரியை நிகழ்வுகள் நேற்று 26.04.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கோப்பாய் வடக்கு பிராமனோடையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின் தகனக் கிரியைகள் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் இடம்பெற்றது.

செந்தூரனின் உடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் கட்சிக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. அன்னாரது வீட்டின் முன்றலில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இரங்கலுரையில் செந்தூரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்காக ஆற்றிய பணிகளை கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறிப்பிட்டு பேசினர்.

இரங்கலுரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்,

செந்தூரனின் தேசிய பற்றுறுதி, அவரின் கொள்கை சார்ந்த பார்வை எப்போதுமே உறுதியானது. அதனையும் தாண்டி கட்சிக்கு சுமையைக் கொடுக்காமல் மக்கள் மட்டத்தில் செய்ய வேண்டிய வேலையை கட்சி சார்பில் செய்து எமது அமைப்புக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தார். எந்த ஒரு இடத்திலும் தனக்கு சரியென்று பட்டதனை எமக்கு நேரடியாக சொல்ல பின்வாங்கியதில்லை. கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினராகி தான் சார்ந்த பிரதேசத்துக்கு அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளார்.

இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகரன், சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஸ், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.

நேற்று ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த போதும் ஏராளமானோர் இறுதி நிகழ்வில் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.