பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற ஈழத்தமிழர்!- பிரித்தானியாவில் துயரம்

பிரித்தானியாவில் தனது இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு ஈழத்தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கு மாமுனையை சொந்த இடமாகக் கொண்ட நித்தி என அறியப்படும் நிதின்குமார் என்பவர் பிரித்தானியாவின் இல்ஃபோர்ட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இவர் தமது பிள்ளைகள் இருவரையும் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஞாயிறன்று மாலை உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்து பொலிசார் 5.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

Ilford பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து அலறல் சத்தத்துடன் வெளியேறிய நிதின்குமாரின் மனைவி,எனது பிள்ளைகளை யாராவது வந்து காப்பாற்றுங்கள் என வீதியில் வந்து கத்தியுள்ளார்.

நிதின்குமார் தமது குடியிருப்பின் அருகாமையில் அமைந்துள்ள 54 வயதான சண்முகதேவதுரை என்பவரது கடையிலேயே பணியாற்றி வந்துள்ளார்.


நிதின்குமார் தொடர்பில் சண்முகதேவதுரை தெரிவிக்கையில், நித்தி ஒரு அற்புதமான மனிதர், விசுவாசமான தொழிலாளி.

அவர் காலை 9 மணிக்கு கடையைத் திறந்தார், மிகவும் சாதாரணமாகவே வேலை செய்தார், அவர் வீட்டுக்கு புறப்படுவதற்கு சற்று முன்பு எனக்கு தேநீர் தயாரித்து தந்தார்.

ஊரடங்கு நாட்களில் வேலைக்கு செல்வது தமது மனைவிக்கு பிடிக்கவில்லை என்று நித்தி கூறி வந்ததாகவும் சண்முகதேவதுரை குறிப்பிட்டுள்ளார்.

குடும்பப் பிரச்னை காரணமாகவே நிதின்குமார், இந்த கோர முடிவை எடுத்திருக்கலாம் என தேவதுரை தெரிவித்துள்ளார்.

3 வயது மகன் மற்றும் ஒரு வயது பெண் குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பதறிய தாயார் தெருவுக்கு வந்து உதவி கோரியதை நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

நிதின்குமாரின் மகள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. மகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரியவந்துள்ளது.

நிதின்குமாரின் குடியிருப்பில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்களில் பலர் தெரிவித்துள்ளனர்.

தற்போது தற்கொலைக்கு முயன்ற நிதின்குமார், ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.