கொரோனா நோய்த் தாக்கத்தால் ஏற்பட்ட இரத்ததான தேவை: யாழ். சுன்னாகம் இளைஞர்கள் செய்த நல்ல காரியம்! (Photos)

335

சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகத்தினரின் ஏற்பாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள தற்போதைய இரத்ததான தேவையைக் கருத்திற் கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை(08-05-2020) சுன்னாகம் ஜயனார் சனசமூக நிலையத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நடைபெற்றது.

நேற்றுக் காலை- 09 மணியளவில் மேற்படி இளைஞர் கழகத்தின் தலைவர் க.பிரேமதர்ஷன் தலைமையில் ஆரம்பமானது.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வை வலி. தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரன் தர்ஷன், சுன்னாகம் ஐயனார் கோயில் ஆதீன கர்த்தா பா.தர்சிகன் சிவாச்சாரியார், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் ம. பிரதீபன், சுன்னாகம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். கார்த்தீபன், சுன்னாகம் ஐயனார் சனசமூக நிலையத் தலைவர் ர. யோகராஜ் ஆகியோர் இணைந்து மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த இரத்ததான முகாமில் ஊரடங்குச் சட்டத்துக்கு மத்தியிலும் சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரொருவர், சுன்னாகம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். கார்த்தீபன் உள்ளிட்ட 31 வரையான குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி தானம் செய்தனர்.

பெரும்பாலும் இளைஞர்களே குருதிதானம் வழங்கினர். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரும் நேரடியாக வருகை தந்து இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

இன்றைய இளைஞர்கள் தடம் மாறிச் செல்கிறார்கள் என்ற பரவலான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் எமது இளைஞர்கள் குடும்பப் பொறுப்பு மாத்திரமன்றி சமூகப் பொறுப்புணர்ந்தும் பல்வேறு நற் காரியங்களைச் செய்து வருகிறார்கள். வெறுமனவே குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் செய்து கொண்டிருப்பதை விடுத்து இளைஞர்களின் இவ்வாறான முன்னுதாரணமான செயற்பாடுகளுக்கு நாமும் பக்கபலமாகவிருப்போம்.

{சிறப்புத் தொகுப்பு:- செ. ரவிசாந்}