யாழ். குப்பிளானில் பூத்த அதிசய மலர் (Video)

862

எப்போதாவது அபூர்வமாக பூக்கும் கருணைக்கிழங்கு மலர் (Elephant foot yam flower) யாழ்.குப்பிழான் தெற்கு பரிசயப்புலம் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் என்பவரது வீட்டில் இன்று (09-05-2020) மலர்ந்துள்ளது.

இதனை கிடாரம் மலர், கிடாரன் மலர் என்றும் அழைப்பர்.

குறித்த வீட்டின் பின்புறமாகவுள்ள வீட்டுத் தோட்டத்திலேயே இந்தப் பெரும் மலர் மலர்ந்துள்ளது. இந்த மலர் அதிக துர்நாற்றமுடைதாயினும் இன்றைய நாளில் துர்நாற்றத்தை உணர முடியவில்லை.

குறித்த மலர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னரே மொட்டாக இருந்துள்ளது. இந்த நிலையில் ஐந்து நாட்களுக்குப் பின்னர் இன்று(09) காலையிலேயே மலர்ந்துள்ளது.

இதுதொடர்பில் யாழ். மாவட்ட விவசாயத் துறையைச் சேர்ந்த உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு கேட்ட போது,

கருணைக் கிழங்கை மூன்றில் இருந்து ஐந்து வருடங்கள் பிடுங்கப்படாமல் மண்ணுக்குள்ளேயே இருந்தால் இவ்வாறு பூ உருவாகும் சாத்தியமுள்ளதாகவும். எனினும், அது மிகவும் அபூர்வமானது எனவும் தெரிவித்தார்.

இதேபோன்றதொரு மலர் கடந்த-2018 ஆம் ஆண்டில் தெல்லிப்பழை கமநல சேவைகள் நிலைய வளாகத்தில் பூத்திருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, குறித்த மலர் அதிகம் துர்நாற்றம் கொண்டதெனக் கூறப்பட்டாலும் இந்த மலரின் கிழங்கு தலைவலி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வருகின்றது.

மேற்படி அதிசய மலர் தொடர்பில் தகவலறிந்து அதனைப் பார்ப்பதற்காக இன்று பிற்பகல்-05.30 மணிக்குப் பின்னர் ஏராளமானோர் மேற்படி வீட்டுக்குச் சென்று வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டு இணையத்தில் தரவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில் நாட்சென்ற கருணைக்கிழங்கில் இருந்து பூ வெளிவந்திருப்பதனை காணலாம்.