தீவிரமடைகிறது அம்பான் புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்ககடலில் உருவாகி உள்ள அம்பான் (Amphan) புயலானது அதி தீவிர புயலாக உருவெடுத்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பான் புயல் வருகிற 19ந்தேதி முதல் மணிக்கு 170 முதல் 180கிலோ மீட்டர் வேகத்தில் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சில இடங்களில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக ஓடிசாவின் கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு வங்கத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பான் புயலானது வருகிற 20ந்தேதியன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கடலோரத்தில் கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் வடமேற்கு திசையில் நகரும் இந்த புயல் பின்னர் திசை மாறி வடகிழக்கு திசை வழியாக சென்று வடமேற்கு வங்காள விரிகுடா வழியாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை நோக்கி திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது.