வடமாகாணத்தில் தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று ஆரம்பம்

81


இலங்கையின் வடக்கு மாகாணத்துக்குள் மாவட்டங்களுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து சேவைகள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக கோரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த பின்னர் இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து சேவையினை மாகாணத்துக்கு உட்பட்டு நடாத்த உள்ளோம்.

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக தனியார் பேருந்து சேவைகள் யாவும் இன்றைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும்.

குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதாவது கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின் பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி நடத்துனர்கள் சுமார் 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனினும் பொதுமக்களின் நலன் கருதியே இன்றைய தினத்தில் இருந்து குறித்த சேவையினை ஆரம்பிக்க உள்ளோம் – என்றார்.