யாழில் வீசிய பலத்த காற்றினால் குலைகளோடு வீழ்ந்து கிடக்கும் வாழைகள்!- நிர்க்கதியில் விவசாயிகள் (Photos)

யாழ்ப்பாணத்தில் வீசி வரும் அதி வேகமான காற்றின் காரணமாக பல்வேறு இடங்களிலும் வாழை மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

நேற்று 21.05.2020 புதன்கிழமை அதிகாலையிலிருந்து பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காணப்பட்டது.

மண் புழுதியை வாரி அள்ளி வீசிக் கொண்டிருந்த காற்றினால் விவசாயிகள் பெரும் இடர்களை சந்தித்தனர்.

யாழ்ப்பாணத்தின் நீர்வேலி, புத்தூர், அச்சுவேலி, நிலாவரை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, குரும்பசிட்டி, வசாவிளான், குப்பிளான் போன்ற பகுதிகளில் வாழைகள் முறிந்து வீழ்ந்ததினால் வாழைத் தோட்டச் செய்கையாளர்கள் பெருத்த அழிவையும் நஸ்டத்தையும் சந்தித்துள்ளனர்.

பிஞ்சு வாழைக்குலையில் இருந்து பெருத்த குலைகளோடு இருந்த வாழை மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதனால் தாம் நிர்க்கதியாகி உள்ளதாக வாழை செய்கையாளர்கள் கூறுகின்றனர். தமக்கு உரிய நட்ட ஈட்டை அரசாங்கம் தந்துதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ் மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவிக்கையில்,

“வங்கக் கடலில் உருவான அம்பான் புயலின் தாக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலும் காற்றின் தாக்கமானது நேற்று 24 மணித்தியாலங்களுக்குள் உயர்வானதாகக் காணப்பட்டது.

நீர்வேலி, கோப்பாய், அச்சுவேலி, திருநெல்வேலிப் பகுதிகளில் வாழை மரங்கள் குலையோடு சரிந்து வீழ்ந்துள்ளன. பயன்தரு மரங்களும் அழிவடைந்துள்ளன. யாழ்.மாவட்டத்தில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன. என்றார்.