2020 நாடாளுமன்ற தேர்தல்: வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் இறுதி எச்சரிக்கை!

கோழைகளை தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டிய தேவையில்லை. கடந்த பத்து வருடங்களாக ஏமாந்தது போதும். தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தத் துயரத்தை 2020 ஆம் ஆண்டிலாவது முடிவுக்கு கொண்டு வந்து மீட்சியும் மாண்பும் பெறுங்கள். 2009 மே க்குப் பின்னரும் கூட கடந்த பத்தாண்டுகளாக நெஞ்சுரத்தோடும் நேர்மைத் திறனோடும் விசுவாசமாக அரசியல் பணியை முன்னெடுத்துச் செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு (சைக்கிள் சின்னத்துக்கு) வாக்களித்து அரசியல் அதிகாரத்தை வழங்குங்கள். என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜீன் 05, புதன்கிழமை அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள், கடும் சிங்களத் தேசியவாதிகளுக்கே இம்முறை பெருவாரியாக வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப் போகிறார்கள். அவர்கள் தெரிவு செய்து அனுப்பி வைக்கும் தமது அரசியல் பிரதிநிதிகளுக்கு வழங்கும் ஆணை என்பது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வையும் கொடுக்காதே! என்பதாகவே அர்த்தப்படும். ஆகவே தமிழ் மக்களும் இலங்கைத் தீவுக்குள் சிங்களத் தேசியம் என்று ஒன்று இருந்தால், அதற்கு சமமாக தமிழ்த் தேசியம் என்றும் ஒன்று இருக்கிறது என்பதைப் பலமாக முரசறைந்து பறை சாற்றுவதாக இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்கள் வழங்கும் ஆணை என்பது ஒரு தேசத்தையே தீர்வாக கேட்கிறார்கள்! எனும் கோசமாக செய்தியாக அமைய வேண்டும்.

கடும் சிங்களப் போக்காளர்கள் நுழையப் போகும் ஒரு நாடாளுமன்றத்துக்குள், தமிழ் மக்கள் தமது தரப்பில் இருந்து பச்சோந்திகளுக்கு வாக்களித்து அனுப்பி வைத்துப் பயன் ஏதும் இல்லை. இந்தப் பச்சோந்திகள் தேர்தலில் வெல்ல முன்னர் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும், வெற்றி பெற்ற பின்னர் கொழும்பில் ஆளும் அரசுக்கு இன்னொரு முகத்தையும் காட்டும்! கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்கள் அனுப்பி வைத்த இந்தப் பச்சோந்திகள் பணப் பெட்டிகளுக்குள் மதி மயங்கி சுருண்டு படுத்தெழும்பி வந்ததே தமிழர் அரசியலின் துயரம் தோய்ந்த வரலாறு. எனவே சிங்கங்களின் கேள்விகளுக்கு புலிகள் தான் பதிலளிக்க வேண்டும், கழுதைகள் அல்ல! சிங்களத் தலைமைகள் போர் வெற்றிவாத ஒடுக்குமுறைச் சிந்தனையில் எட்டடி பாய்ந்தால், தமிழர்களும் அடி பணிந்து வாழ மாட்டோம் எனும் இனமானச் சிந்தனையில் தமது கொள்கை, உரிமை, அரசியல் நியாயப்பாடுகளில் பதினாறடி பாய வேண்டும். அந்த வல்லமை இப்போதைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுமைகளுக்கு மட்டுமே உண்டு!

இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களுக்கு கலகக்காரர்களே தேவைப்படுகின்றார்கள். மாறாக நல்லிணக்கம், சாணக்கியம், மென்வலு, இணக்க அரசியல் எனும் போலிப் பெயர்களில் தமது இயலாமையை முடியாமையை தோல்வியை மறைத்துக் கொண்டு சிங்களப் பேரினவாதத்தின் அடி கழுவி அடி தழுவி சேவகம் செய்து பிழைப்பு நடத்தி, தருவதை தரட்டும். வாங்கிக் கொள்வோம் எனும் மனநிலையில் இருக்கும் கோழைகளை தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டியத் தேவையில்லை. கடந்த பத்து வருடங்களாக ஏமாந்தது போதும். தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தத் துயரத்தை 2020 ஆம் ஆண்டிலாவது முடிவுக்கு கொண்டு வந்து மீட்சியும் மாண்பும் பெறுங்கள்.

உண்மையாகவே தமிழ் மக்கள், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை போற்றும், அவரை வழித் தொடரும் சுயமரியாதை உள்ள, பகுத்தறிவு கொண்ட ஒரு இனமான மக்கள் எனில், தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை உங்கள் நெஞ்சத்தில் உயர ஏந்திப் பிடித்து உண்மையாகவே நீங்கள் விசுவாசிப்பவராக இருந்தால்,

அவர் சுதுமலை பிரகடனம் தொடங்கி நோர்வே ஒஸ்லோ பேச்சுவார்த்தை உடன்படிக்கை வரை விட்டுச் சென்ற “தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம்” எனும் உயரிய கோரிக்கையை நீர்த்துப் போக விடாமல், அதனை தொடர்ச்சியாக 2009 மே க்குப் பின்னரும் கூட கடந்த பத்தாண்டுகளாக நெஞ்சுரத்தோடும் நேர்மைத் திறனோடும் விசுவாசமாக அரசியல் பணியை முன்னெடுத்துச் செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு (சைக்கிள் சின்னத்துக்கு) வாக்களித்து அரசியல் அதிகாரத்தை வழங்குங்கள்.

தலைவரின் வாழ்க்கை எமக்கு ஒரு வரலாற்று பாடம். அது தான் தமிழீழ மக்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் இருக்க முடியும். எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம்! இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை பெரு நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு