சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான இன்று அதிர்ந்தது யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா (Video)

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான இன்று 30.08.2020 காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலிருந்து பேரணி ஆரம்பமானது.

முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டி போராடும் போது உயிரிழந்த தாய் மற்றும் தந்தையருக்கு ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

குறித்த பேரணியானது யாழ்ப்பாணம் நல்லூர் – கிட்டுப் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி முத்திரைச்சந்தியை அடைந்து அங்கிருந்து நல்லூர் ஆலயத்தை அடைந்து கோவில் வீதியூடாக நாவலர் வீதியை அடைந்து பின் ஐநாவின் வதிவிட அலுவலகத்தை சென்றடைந்தது.

ஐநாவே தலையிடு, எங்கே எங்கே உறவுகள் எங்கே?, ஐநா அமைதிப்படை வரவேண்டும், தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோஷங்கள் உறவுகளால் எழுப்பப்பட்டது.

அங்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல் மற்றும் நீதிக்கான அவசர தேவை கருதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கையொன்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இதேவேளை யாழ்நகர மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமான மற்றொரு பேரணி யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.