லொஸ்லியாவை முன்வைத்து நம் கூட்டு சமூக மனநிலை குறித்து ஓர் நோக்கு!- Dr சிவச்சந்திரன்

லொஸ்லியாவுக்கு திருமணம் என்றொரு செய்தி பார்த்தும் முதல் கட்டமாக அதன் கருத்துப்பகுதியை வசிக்கத் தொடங்கினேன். லொஸ்லியா பற்றி என்ன செய்தி வந்தாலும் தேடி வாசிப்பேன். ஒரு சமூக ஆய்வாக இதை செய்துகொண்டிருக்கிறேன்.
என்ன லொஸ்லியா பற்றிய செய்திகள் சமூக ஆய்வா? இதுவரையான ஆய்வு முடிவுகளை சொல்கிறேன்.

ஒரு பிக் பாஸ் நிகழ்வில் ஓவியா பிரபலமாகிறார். ஒருவரை காதலிக்கிறார். முத்தம் கூட கொடுக்கிறார்.. அடுத்த பிக் போஸ் நிகழ்வில் லொஸ்லியா பங்கு பெறுகிறார். காதலிக்கிறார். முத்தம் கொடுக்கவில்லை.

இங்கே காதலிப்பதுதான் இருவருக்கும் பொதுவானது. இருவரும் ஒரே வேலையை செய்தாலும் ஓவியாவின் காதலை ஏற்று, ஓவியா ஆர்மி என நம்ம ஊர் பெடியன்கள் எல்லோரும் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஆனால், லொஸ்லியா காதலித்ததை கழுவி ஊற்றியவர்கள் தான் அதிகம். ஏன் என்ற கேள்விதான் ஆய்வுக்கான கேள்வி.

சமூக ஒழுக்கம் என்ற ஒன்று அநேகம் பேரால் முன் வைக்கப்படுகிறது?
அவர்களின் சமூக ஒழுக்கம் என்ற தராசில் ஓவியாவுக்கு மட்டும் ஏன் சலுகை என்பதுதான் அடுத்த கேள்வி. அதையும் அவர்களே சொல்லிவிட்டார்கள்.

அண்மையில் ஒரு பெண் ஒரு மீம்ஸ் பகிர்ந்திருந்தார்.
அதிலே லொஸ்லியா, ஒரு சவர்கார விளம்பரத்திலே நடிக்கும் படம். மீம்ஸ் இதுதான், ` இங்க சன்லைட் போட்டு குளிச்ச ஆளிட பில்டப்பை பாரு` .
நம்மட ஆட்களின் மன நிலை இதுதான்.

ஓவியாவுக்கு, லொஸ்லியாவுக்கு ம் இடையே இருக்கும் வித்தியாசம், ஓவியா ஒரு இந்திய பெண். லொஸ்லியா நம் சமூகத்தில் இருந்து போன பெண்.
நம்மவர்களுக்கு இருக்கும் பிரச்சினை, நமது சமூகத்தில் சம மட்டத்தில் இருந்த ஒருவர் தன்னை விட புகழ் அடைவதோ, வாழ்க்கையில் உயர்வதோ பிடிக்காது.

கொஞ்ச நாளைக்கு முன் ஒரு அக்கா தன்னுடைய அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அவர் ஊரில் கஸ்ட பட்ட குடும்பம். உயர்தரம் பாஸ் பண்ணியதும் , பல்கலைக் கழகம் செல்ல முன் ஒரு பணக்கார வீட்டு பிள்ளைக்கு வகுப்பு எடுத்திருக்கார். பணக்கார வீட்டுக்காரர்களும் அவரோடு அன்பாக பேசி அவசர உதவிகள் கூட செய்திருக்கிறார்கள். அவர் பல்கலைகழகம் முடித்து நல்ல வேலை கிடைத்து ஊரில் அவர் குடும்பமும் உயர தொடங்கியது. படித்த குடும்பம் என்ற நல்ல பெயர் வேற. இப்போது அந்த பணக்கார வீட்டு ஆட்களின் மனநிலை மாறத்தொடங்குகிறது. அதாவது தங்கள் குடும்பத்துக்கு இணையாக அல்லது அதுக்கு மேலாக ஒரு குடும்பம் உயர்வதா என்ற தாழ்வு மனப்பான்மை வரத்தொடங்கியதும், அந்தப் பெண்ணைப் பற்றி பிழையாக பேசத் தொடங்குகிறார்கள்.

அதே மனநிலையைத்தான் லொஸ்லியாவின் விடயத்திலும் காட்டுகிறார்கள்.
ஊரில நம்மள மாதிரி திரிந்த ஒருத்தி எப்படி திடீரென இந்த நிலைக்கு உயரலாம் என்ற பொறாமை அவர்களை ஆட்கொள்கிறது. அதை மறைக்க சமூக ஒழுக்கம் என்ற ஒன்றை தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.

இதை இன்னும் கொஞ்சம் டீப்பா அனலைஸ் பண்ணினா, இந்த மன நிலைதான் நம் சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கு காரணமாகவும் இருக்கிறது புரியும்.
` இந்த சாதிக்காரன் இந்த தொழில் செய்யலாமா?`
`இவர்ட குடும்ப நிலைக்கு இது இப்போது தேவையா?` இந்த இரண்டு வசனங்களை கேட்காதவர்கள் இருப்பீர்களா?

அண்மையில் எனது சிங்கள நண்பர் சொன்ன ஒரு உண்மை விடயம். தமிழ் பகுதியில் ஒரு அலுவலகத்துக்கு பொறுப்பாளராக சென்றுள்ளார். அங்கே உயர் பதவியில் இருக்கும் சிலரை அவர்களுக்கு கீழே வேலை செய்ப்பவர்களே மதிப்பதில்லை. அவர்கள் சொல்வதை கேட்பதில்லை என்பதை அவதானித்தவர் . விசாரித்த போதுதான் அங்கே உயர் பதவியில் இருக்கும் இருவர் குறைந்த சாதிக்காரர் என்று அறிந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புதான் நடந்த விடயம் இது.

இதே மன நிலைதான் ` நம்மளைப்போல நம்ம ஊர்ல சன்லைட் போட்ட பிள்ளை , இந்தியாவில் சோப்பு விளம்பரத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்வதா?`

சரி இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.
கனடாவில் இருந்தும், இங்கிலாந்தில் இருந்தும் இரு பெண்கள் பாட்டு போட்டியில் கலந்து பிரபலமானார்கள் . அவர்களின் பெயரை கேட்டால் உடனே சொல்லிவிடுவீர்கள்.

அதேபோல் ஒரு அகதியாக இருக்கும் பெண்ணும் முன்னேறினாள். அவளின் முகம் அப்படியே பணக்கார களை இல்லாத நம்ம ஊரிலே இருக்கும் பெண் போலவே இருக்கும். அவளின் பெயர் எத்தனை பேருக்கு தெரியும்?

வெளிநாட்டில் இருக்கும் ஒரு பெண் தமிழ் பெண் என்றாலும் உயர்ந்த ஆட்கள் என்ற எண்ணம் நம்மவர்களுக்கு. அதாவது ஓவியா போல. ஆனால் நம்ம ஊரிலே நம்மளைப்போல கஷ்ட்டமான நிலையில் இருக்கும் பெண் எப்படி உயரலாம்? அதாவது லொஸ்லியா போல.

அதாவது நாம் சம மட்டம் என நினைப்பவர்கள் புகழ் பெறுவதை நம்மவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இப்போது உங்களுக்கு ஒரு பயிற்சி தருகிறேன்.

நீங்கள் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட சம அந்தஸ்துடன் இருக்கும் போது நெருங்கிய நண்பர்களாக இருந்து, உங்கள் அந்தஸ்து உயர்ந்தவுடன் காரணமே இல்லாமல் உங்களோடு பிரச்சினைப்பட்டு பிரிந்தவர்கள் அல்லது எதிரி ஆனவர்கள் எத்தனை என எண்ணிப்பாருங்கள்.

நன்றி: மருத்துவர் சிவச்சந்திரன்-