வடமராட்சி இராஜகிராமம் மக்களின் நடவடிக்கைகளால் சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி வடக்கு இராஜகிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து அந்தக் கிராமத்தின் ஒருபகுதி கடந்த 29 ஆம் திகதி முதல் முடக்கப்பட்டிருந்தது. குறித்த அபாய அறிவிப்பை பொருட்படுத்தாத அக்கிராம மக்கள் நெல்லியடி நகரிலும் ஏனைய இடங்களிலும் சகஜமாக சென்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்துள்ள அதிகாரிகள் நேற்று முதல் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இராஜகிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டார். 29 ஆம் திகதி நடந்த பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் சிறிதும் பொறுப்பற்ற விதமாக நடந்த அந்த நபர் பல்வேறு இடங்களிற்கும் சென்று வந்துள்ளார்.

குறித்த நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சென்று வந்ததாக கூறும் இடங்கள் பற்றிய பெரிய பட்டியலே வெளியானதால் அதிகாரிகள் செய்வதறியாது போயுள்ளனர்.

நேற்றைய தினம் இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களில் சிலர் நெல்லியடி சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அத்துடன், பேருந்து தரிப்பிடம், முச்சக்கர வண்டி தரிப்பிடங்களிலும் சுதந்திரமாக உலாவி திரிந்ததை அவதானித்ததாக நெல்லியடி சந்தையில் பணியில் ஈடுபடும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தாமும் கொரோனா தொற்றுக்கு இலக்காகும் அபாயம் காணப்படுவதாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையெடுத்துள்ள கரவெட்டி பிரதேசசபை நெல்லியடி சந்தை, பேருந்து நிலையம், முச்சக்கரவண்டி தரிப்பிடம் ஆகியவற்றை மூடுமாறு வடக்கு ஆளுனர், உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புக்களிடமிருந்து உடனடியாக பதில் வராவிட்டால், இன்று தற்துணிவாக அவற்றை மூட பிரதேசசபை தீர்மானித்துள்ளது.

முடக்கப்பட்ட கிராமத்தில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், இராணுவத்தினர் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வீடுவீடாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப அட்டை பரிசோதிக்கப்பட்டு, குடும்ப அட்டையில் உள்ள பெயரிற்குரியவர் வீட்டில் தங்கியிருக்கிறாரா என்பதை பரிசோதித்து வருகிறார்கள்.

நெல்லியடி நகரின் பல இடங்களிலும் தொற்றுநீக்கிகள் விசிறப்பட்டுள்ளன.

வடமராட்சியில் தனியார் பேரூந்துகள் இயக்கம் மீள ஆரம்பம்

வடமராட்சி இராஜகிராமத்தை சேர்ந்த தனியார் பேரூந்து சாரதிகள், நடத்துனர்களைத் தவிர ஏனைய தனியார் பேருந்து சாரதி, நடத்துனர்கள் தமது சேவையை இன்று முதல் தொடரலாம் என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் – தனியார் பேரூந்து சங்கத்தினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு காணப்பட்டுள்ளது.