பிரான்சை தொடர்ந்து பிரித்தானியாவிலும் ஊரடங்கு

 

உலகளவில் இன்றைய நிலவரப்படி கொரோனாவால் 4 கோடியே 64 லட்சத்து 40 ஆயிரத்து 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சத்து ஆயிரத்து 123 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 35 லட்சத்து 28 ஆயிரத்து 971 பேர் மீண்டுள்ளனர். மீண்டும் உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது.

பிரான்ஸ் நாட்டை தொடர்ந்து பிரித்தானியாவிலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மீண்டும் நான்கு வாரம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

வரும் ஐந்தாம் திகதி முதல் பிரித்தானியாவிலும் ஊரடங்கு

வருகின்ற 5 ஆம் தேதி முதல் அமுலாகும் இந்த ஊரடங்கு, மார்கழி மாதம் 2 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். அதேநேரத்தில் வேலை, கல்வி மற்றும் உடற்பயிற்சி தவிர வேறு எதற்காகவும், மக்கள் வீட்டை விட்டு வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், பல்கலைகழகங்கள் திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில், அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சல் மட்டுமே வாங்கி செல்லலாம். ரெஸ்டாரண்ட்கள், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கூடங்கள் , அத்தியாவசிய பொருட்கள் அல்லாத கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். ஊரடங்கு காரணமாக வேலையிழப்பால் பாதிக்கப்படும் மக்களுக்கு, சம்பளத்தில் 80 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ளார்.

 

 

பிரிட்டனில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகளவில் பரவ துவங்கியுள்ளது. நேற்று மட்டும், 22 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 10 லட்சத்தை கடந்துள்ளது. 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு, முன்னர் கணிக்கப்பட்டதை விட கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், டிசம்பர் மாதத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என நிபுணர்கள், விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, நேற்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, ஊரடங்கை மீண்டும் அமுல்படுத்துவது என முடிவாகி உள்ளது.

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு: தினமும் கொரோனாவால் 50000 க்கு மேற்பட்டோர் பாதிப்பு

பிரான்சில், கொரோனாவை கட்டுப்படுத்த, இரண்டாவது முறையாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதையடுத்து, பல நாடுகள், இரண்டாவது முறையாக, முழு ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளன.

பிரான்சில், கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. தினமும், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர், பாதிக்கப்படுகின்றனர். இங்கு, வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 13 லட்சத்து, 31 ஆயிரத்து, 984 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை. 36 ஆயிரத்து, 565 ஆகவும் அதிகரித்து உள்ளது.

இதையடுத்து, பிரான்சில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ‘அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர மருத்துவ பணிகளுக்கு மட்டுமே, மக்கள், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும்’ என, அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, தலைநகர் பாரிசிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கி பணியாற்றி வரும், அந்த நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சொந்த ஊர்களுக்கு, நேற்று முன்தினம் திரும்பத் துவங்கினர்.

பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், மக்கள், தங்கள் சொந்த வாகனங்களில்புறப்பட்டனர். இதனால், தலைநகர் பாரிசில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 700 கி.மீ., துாரத்துக்கு, வாகனங்கள் அணி வகுத்து நின்றன. வரலாறு காணாத இந்த நெரிசலால், மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பல மணி நேரத்துக்கு பின், போக்குவரத்து சீராகியது.

கனடாவிலும் அதிகரிக்கும் கொரோனா: துணைப்பிரதமருக்கும் தொற்றில்லை

கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது கனடா நாட்டின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலாண்ட் கொரோனா அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். தற்போதைய முடிவுகளின் படி அவருக்கு கொரோனா தொற்றவில்லை என அவரே ருவிற்றரில் சற்று முன் அறிவித்துள்ளார்.

கனடாவின் ரொறன்ரோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டினா கனடாவில் சரிந்திருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தீவிரமாக செயற்பட்டு வந்தவராவார். சமீபத்தில் கனடா நாட்டில் ‘covid-19’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலிமூலம் பாதிக்கப்பட்டவர் எளிதில் சிகிச்சை பெற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.