நான் எல்லா அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன்: வெற்றிச் செய்தியில் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நீண்ட இழுப்பாடுகளுக்கு மத்தியில் முடிவுக்கு வந்து உள்ளது. அமெரிக்காவின், 46 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், 77, தெரிவாகியுள்ளார்.

“என்னை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி” என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள அவர், தோ்தலில் எதிரெதிராகப் போட்டியிட்டாலும் நாங்கள் எதிரிகள் அல்ல. அமெரிக்கர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் வாக்களித்திருக்காவிட்டாலும் நான் எல்லா அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன்.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன். என அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில், மிக அதிக வயதில் ஜனாதிபதி பதவியை ஏற்பவர் என்ற சாதனையை, ஜோ பைடன் பெறுகிறார். நீண்ட காலமாக, செனட் எம்.பி.,யாகவும், துணை ஜனாதிபதியாகவும் பணியாற்றியுள்ள ஜோ பைடன், 47 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.