கொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டி கிளிநொச்சி சக்திவேலன் ஆலயத்தில் விசேட யாகம் (Photos)

கிளிநொச்சி மாவட்டத்தின் கந்தன்குளம் செல்வாநகர் ஓம் சக்திவேலன் ஆலயத்தில் நேற்று 09.11.2020 திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக விசேட பூசைகள் பிரார்த்தனைகளை தொடர்ந்து மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் வளர்க்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையிலும் பரவுகின்ற கொரோனா நோயின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட இந்து ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிராத்தனை மேற்கொள்ளுமாறு இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்து கலாசார திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய லண்டன் மாநகரிலிருந்து ஓம் சக்திவேலன் ஆலய தர்மகர்த்தாவும் பிரதமபூசகருமாகிய ஓம் சக்திவேலன் ஜயா அவர்களின் பணிப்புக்கமைவாக மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை இந்து சமயத் தொண்டர் சபையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீஸ்காந்தக்குருக்கள் நிகழ்த்த ஆலயபூசகர் சிவஸ்ரீ சு.கயிலாயநாதன் ஜயா, நல்லூர் தவத்திரு வேலன்சுவாமிகள், சைவப்புலவர் சத்தியதாசன், இலங்கை இந்துசமயத் தொண்டர் சபையின் தலைவர் சிவத்திரு வை. மோகனதாஸ் மற்றும் ஆன்மீகப் பெரியார்கள் சக்திவேலன் பக்தர்கள் என கலந்து சிறப்புற இடம்பெற்றது.

தொடர்ந்து வேலனின் அருளில் உலகம் உய்ய என்ற வேலனின் அற்புதங்கள் தாங்கிய நூல் வெளியீடும் இடம்பெற்றது.