கந்தசஷ்டி விரதம்: நல்லூர், சந்நிதியில் பக்தர்களுக்கு தடை, கடுமையான கட்டுப்பாடுகள்

இலங்கை வாழ் முருக பக்தர்கள் ஏராளமானோர் கந்தஷ்டி விரதத்தை அனுட்டித்து வருகின்றார்கள். இம்முறை கொரோனா காலமாகையால் ஆலய வழிபாடுகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் மற்றும் நல்லூர் ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கந்தசஷ்டி விரதத்தின் ஆரம்ப நாளான நேற்று பெருமளவான அடியார்கள் ஆலயத்திற்கு சென்றிருந்த போதும் வெளி வீதியில் வைத்தே சந்நிதியானை தரிசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆலய வெளி வீதிக்குள் செல்லும் அடியார்களில் ஐந்து நபர்கள் மாத்திரம் உள்நுழைய அனுமதித்து பின்பு உள்நுழைந்த அடியார்கள் வெளியில் வந்ததும் வேறு ஐந்து நபர்கள் செல்வதற்கு சுழற்சி முறையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறான நடைமுறை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

நல்லூரிலும் உள்நுழைய தடை

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

தற்போதைய கோவிட் 19, சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய நேற்று கந்தசஷ்டி முதலாம் நாள் உற்சவத்தின் போது அழகிய இடப வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி, உள் வீதியுலா வந்தார்.

அரசாங்க அறிவுறுத்தல்களின் படி, ஆலயத்தினுள் அடியவர்கள் எவரும் அனுமதிக்கப்படாத போதிலும், கந்தசஷ்டி விரதகாரர்கள் பலர் சமூக இடைவெளிகளை பேணி வெளிவீதியில் இருந்து கந்தனை தரிசித்தனர்.