தமிழ்மக்களுக்கு இல்லாத ஜனநாயக உரிமைகள் சிங்கள – முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை

அரசியலில் வைரஸாக கருதப்பட்ட 20 ஆவது திருத்தத்தை நாட்டுக்குள் கொண்டு வந்தபோது அதற்கெதிரான சிவில் எதிர்ப்பு திரளக் கூடாது என்பதற்காக கொவிட் 19 ஐ காரணம் காட்டி தான் அரசாங்கம் ஊர்வலங்களையும் மக்கள் கூடும் நிகழ்வுகளையும் தடை செய்தது.

ராஜபக்சக்களின் வெற்றிக்குப் பின் பௌத்த மத, கிறிஸ்தவ மத சங்கங்கள் கூட வாய்திறக்கவில்லை. சிங்கள எதிர்க்கட்சிகள் கூட அப்படியே வாயடங்கி போயின. மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தார்கள். அதற்கு பிறகு தான் சிங்கள எதிர்க்கட்சிகள் கூட தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். ராஜபக்சக்களின் பெரு வெற்றியின் பிறகு எல்லா சிவில் அமைப்புகளும் கூட அப்படியே அமிழ்ந்து போய்விட்டன என்பது தான் உண்மை.

இதற்குள் ஒரு செய்தி இருக்கிறது. இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பதில் தமிழ்மக்களுக்கும் உள்ள பங்கு என்ன என்பது தெரியவருகிறது. தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் இருந்தால் தான் அதனை சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் அனுபவிக்கலாம். தமிழ்மக்களுக்கு இல்லாத ஜனநாயக உரிமை சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. இது விடயத்தில் தமிழ்மக்கள் தான் எதிர்ப்பை துலக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள்.