யாழ்ப்பாணத்தில் இன்று நள்ளிரவு தொடக்கம் காலை வரை மழை பொழிந்து தள்ளியது. கடும் காற்றும் வீசியது. இடிமுழக்கங்கள் அதிகரித்து காணப்பட்டன.
கடந்த இரு நாட்களாக தாழமுக்கமாக தொடங்கி புயலாக மாறிய நிவர் சூறாவளியின் தாக்கம் இன்று (வியாழக்கிழமை) முதல் குறைவடைக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த நிவர் என்ற சூறாவளியானது தமிழகக் கரையை ஊடறுத்து வடமேல் திசையில் நகர்வதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியள்ளது.
இதன்காரணமாக வடமேல், மேல், சப்ரகமுவ, மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவுமென அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நிவர் புயல் முழுவதுமாக கரையைக கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை நான்கு மணியளவில் புயல் முழுவதுமாக கரையைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.