மாவீரர்களை நினைவேந்தி மாலை 6.07 மணிக்கு வீடுகளில் சுடரேற்றுங்கள்!- தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை

தமிழினத்தின் உரிமைக்காக போராடிய மாவீரர்களை நினைவுகூர்வதற்கு தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் தமிழ்மக்கள் தயாராகி வருகின்றனர்.

இம்முறை ராஜபக்சக்களின் ஆட்சி மீண்டும் வந்துள்ள சூழ்நிலையில் நினைவேந்தலை அனுட்டிப்பதற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக தடை உத்தரவுகளை பொலிஸார் பெற்றுள்ளனர். இதனால் மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத்தூபிகள், பொதுஇடங்களில் நினைவேந்தலை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 6.07 மணிக்கு தமிழ்மக்கள் தங்கள் வீடுகள் தோறும் ஈகைச் சுடரேற்றி மாவீரர்களை அஞ்சலிக்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

கடந்த காலம் போன்று இம்முறையும் மாவீரர் தினத்தை துயிலுமில்லங்களில் பேரெழுச்சியுடன் அனுட்டிப்பதற்காக துயிலுமில்லங்கள் துப்பரவு செய்யப்பட்டன.

ஆனால், இதற்கெதிராக பயங்கரவாத தடை சட்டத்தையும், கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தையும் காரணம் காட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் தடையுத்தரவுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மண் காத்த மாவீரர்களின் நினைவாக சூழலைக் காக்கும் மரங்களை நாட்டுவோம் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் கேட்டுள்ளார்.

எந்த அரசினாலும் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்க முடியாது. ஆகவே, நாங்கள் நினைவேந்தல் செய்வதற்கு இடையூறு இல்லாமல் இருங்கள் என சிவாஜிலிங்கம் அரசிடம் கோரியுள்ளார்.