வவுனியாவில் 460 ரூபாவுக்கு உளுந்து கொள்வனவில் கமநல திணைக்களம்

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அதிகளவு உளுந்து பயிர்ச்செய்கை பருவமழையை நம்பி மேற்கொள்வது வழமையாகும். இம்முறையும் பலர் செய்கையில் ஈடுபட்ட போதும் வழமை போல் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து உளுந்தினை தனியார் துறையினர் கொள்வனவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உளுந்தினை அத்தாட்சிப்படுத்தல் விலையான 460 ரூபாவிற்கு கமநல திணைக்களத்தில் வழங்க முடியுமென வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்தார்.

உளுந்து கொள்வனவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் உளுந்து அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகளிடமிருந்து தனியார் துறையினர் மிகக் குறைந்த விலைக்கே உளுந்தினை கொள்வனவு செய்து வருகின்றனர். இதனையடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அத்தாட்சிப்படுத்தப்பட்ட விலையான 460 ரூபாவிற்கு உளுந்தினை கமநல திணைக்களம் கொள்வனவு செய்ய தயாராகவுள்ளமையினால் விவசாயிகள் அருகேயுள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் உளுந்தினை வழங்க முடியுமெனவும்,

ஒரு கிலோ உளுந்தினை 460 ரூபாவிற்கு அதிகமாக தனியார் துறையினர் கொள்வனவு செய்வார்கள் எனில் தனியார் துறையினருக்கு வழங்குமாறு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது கடைகளில் உளுந்து கிலோ 1400 ரூபாவுக்கும் 2000 ரூபாவுக்கும் இடையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.