மூன்று நாள் முழுமையான பயணக்கட்டுப்பாடு அமுலாகியது!- மீறினால் 6 வருடம் சிறை

இலங்கை முழுவதும் மூன்று நாள் முழுமையான பயணக்கட்டுப்பாடு நேற்று (13) இரவு முதல் அமுலாகியது. எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.

முழுமையாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மூன்று தினங்களில் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பயன்படுத்தி பயணிக்க எந்தவித அனுமதியுமில்லையென்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று இரவு 11.00 மணி தொடக்கம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 4 மணிவரை இந்த பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இக்காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்த அவர் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறும் என்றும் கூறினார்.

தனிமைப்படுத்தல் அல்லது பயண விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் பிரகாரம், மீறுவோருக்கு எதிராக, 6 வருடங்கள் தொடர் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது 10ஆயிரம் ரூபாய் தண்டம் இன்றேல், இரண்டும் ஒரேதடவையில் விதிக்கப்படலாம் என்றார்.

அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்ட அவர், வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என கூறினார்.

மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்கு வைத்தியசாலைக்கு செல்வதற்கு மற்றும் மருந்துப்பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள குறித்த 3 நாட்களின் பின்னர் அதாவது எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரே தேசிய அடையாள அட்டை முறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் முழுமையாக போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.