தமிழ்மக்களுக்கு மறுத்துவிட்டு சீனாவுக்கு வழங்குகிறீர்கள்: கஜேந்திரகுமார் எம்.பி நாடாளுமன்றில் உரை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தை உச்சநிலையில் இருந்த போது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நிலப்ரப்பை அதன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த போது, மேற்கொண்டு பேச்சுவார்த்தையை தொடரும் வகையில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால் உங்கள் இனவாத மனோநிலையில் அதனை நிராகரித்தீர்கள்.
அதை ஒரு இடைக்கால ஏற்பாடாக கூட நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரற்று அதை நிராகரித்திருந்தீர்கள்.

தமிழ்மக்கள் ஏதோ ஒருவகையில் ஒரு சிறிதளவேனும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்காக எம்மை அழிக்கக் கூட துணிந்தீர்கள்.

அதற்காக எமது மக்கள் மீது இனப்படுகொலையை அரங்கேற்றினீர்கள்.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் துறைமுகநகர சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் 2021-05-20 கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அவரது முழுமையான உரையின் தமிழாக்கம் :

இங்கே இருக்கின்ற பெரும்பாலான எதிர்கட்சி உறுப்பினர்கள் இச்சட்டமூலத்தை அணுகியதை போலன்றி, நாம் பிறிதொரு கோணத்திலேயே இதனை பார்க்க விரும்புகின்றோம்.

ஒரு சிறிய நாடாகவுள்ள இலங்கை சர்வதேச அளவிலான பொருண்மியப் போட்டிகளை வினைத்திறனுடன் எதிர்கொள்ள வேண்டுமேயானால் புதிய செயற்திறனுள்ள வழிமுறைகளைக் கண்டறிவது பற்றிச் சிந்திக்க வேண்டிள்ளது என்பது புரிந்து கொள்ளக்கூடியது.

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகளவில் பொருண்மிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிற நிலையில், பொருளாதாரத்தை வினைதிறனுடன் தக்கவைத்துக் கொள்வதற்கு இலங்கை அதிகளவில் செயற்பட வேண்டியுள்ளது என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே.

அந்த வகையில் பார்க்கிற போது, உண்மையில் நியாயமான நோக்கங்களுக்காக சிறப்பு பொருண்மிய வலயங்களை அல்லது வேறெந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது பற்றிச் சிந்திப்பது தவறானதல்ல.

அல்லது இத்தகைய புதிய அணுகுமுறைகளை கையாள்வதற்கும், அதற்கான செயற்படு வெளியினை உருவாக்குவதற்கும், அரசியலமைப்பில் கூட மாற்றங்களைக் கொண்டு வருவதனையோ அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய சட்ட மூலங்களைக் கொண்டு வருவதனையோ, ஏன், ஒப்பங்கோடல் முறையிலான பொது வாக்கெடுப்புக்குச் செல்வதனையோ நாம் தவறெனக் கூறமுடியாது.

ஏனெனில், உண்மையில் இந்த தீவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பானது எழுபத்தி மூன்று வருடங்கள் பழமையானது.

அந்த அரசியலமைப்பில் கூட இதுவரை நீங்கள் 20 தடவைகள் திருத்தங்களைச் செய்துள்ளீர்கள்.
ஆனால், நடைமுறையில் இன்னமும் பிரச்சனை அதிகரித்துத் தான் செல்கிறது. நாட்டிற்குள் பிளவுகள் அதிகரித்த வண்ணம்தான் இருக்கின்றன. இனங்களுக்கிடையில் பிளவுகள் அதிகரித்து எதிரெதிர் துருவ நிலைக்கு செல்கின்றன.

உண்மையில் இந்த அரசியலமைப்பானது, செயற்பாட்டுக்கு உதவாத, ஒரு செயலலிழந்த அரசிலமைப்பாக மாறிவிட்டது.

வெறுமனே உணர்ச்சிகளின் அடிப்படையிலே அல்லது இனவாதத்தின் அடிப்படையிலேயே இந்த அரசியலமைப்பை நீங்கள் இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தவிர உண்மையில் இது ஒரு செயலிழந்த பயனற்ற அரசியலமைப்பாகும்.

இப்படியான ஒரு உணர்ச்சிமைய அரசியலமைப்பு மூலம் அதிகாரத்தை மத்தியில் குவித்து வைப்பதில் எதுவித அர்த்தமுமில்லை.

அந்த வாதத்தின் அடிப்படையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை நேரடியாக ஊக்குவிக்கும் வகையில், புதிய தனி அலகாக துறைமுக நகரத்தை உருவாக்குவது, தொழில் வாய்ப்புகள்- தொழிற் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பொருண்மிய மேம்பாட்டினை ஏற்படுத்துவதற்கு அதனை பரிசீலிப்பது போன்றவை, தவறான அணுகுமுறை எனக் கூறமுடியாது.

இவ்விடயங்களில் நாட்டின் ஏனைய பகுதிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ள நிலையில் அதன் அவசியத்தை உணரக்கூடியதாக இருக்கிறது.

ஆனாலும், நாங்கள் இத் துறைமுக சட்டமூலத்தை எதிர்க்கிறோம். பொருண்மிய மேம்பாட்டை ஏற்படுத்துவதுதான் இங்கு முதன்மையான நோக்கமாக இருப்பின், அந்தக் குறிக்கோளில் எதுவித தவறும் இல்லை. உண்மையில் அப்படி இருப்பின் அதை நாம் எதிர்க்கவும் தேவையில்லை.

ஆனால், நாம் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதற்கான காரணம் வேறு.
இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையானது, செயலிழந்து போன – குறிப்பாக, இந்த நவீன காலத்தில் காலாவதியான ஒரு கோட்பாடு என்பதை எமது அரசியல் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

நாட்டின் ‘இறைமை ‘என அரசாங்கமும், ஏன் – எதிர்க்கட்சியும் வரையறுக்கின்ற விடயத்தையும் நாம் ஏற்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக பிரதான எதிர்கட்சி கூட ‘ இறைமை’ என நீங்கள் வரையறுக்கின்ற விடயத்தில் அரசாங்கத்தையே விஞ்சுகிறபடி பேசி வருகிறது. இறைமை எனும் பெயரில் நீங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது உண்மையில் காலாவதியாகிவிட்ட ஒரு கருதுகோள்.

உலகபொருளாதார விடயத்தில் ஒரு தரப்பாக இருக்க விரும்பும் நீஙகள், உள்நாட்டில் இவ்வாறு நடந்துகொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பாக புதிதாகச் சிந்திக்க வேண்டும். இவ்வரசியல் யாப்பு தொடர்பாக புதிதாகச் சிந்திக்க வேண்டும். இந்த நவீன யுகத்திற்கு ஏற்ற விதத்தில் அரசியலமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த எத்தனிப்பதனை நாங்கள் வரவேற்போம்.

இச்சட்டமூலம் கொண்டு வருவது தொடர்பாக அரசாங்கம் உத்தியோகபூர்வமான முறையில் வெளிப்படையாக குறிப்பிடுகின்ற நோக்கங்களுக்காக நாங்கள் இச்சட்டமூலத்தை எதிர்க்கவில்லை என்பதனை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் இதனை எதிர்ப்பது வேறு ஒரு கோணத்திலேயே.

உண்மை என்னவென்றால், இன்றைய உலகில், எவரும் எதனையும் தமக்கு இலாபமின்றி செய்வது கிடையாது. இது தான் யதார்த்தம்.

முன்னைய மகிந்த இராஜபக்சவின் அரசாங்கத்தினைப் போலவே இந்த அரசாங்கமும், நீண்டகாலமாக இங்கே நிலவிவரும் புவிசார் அரசியல் சமநிலையை சவாலுக்குட்படுத்தி குழப்புவதை தமது தெரிவாக கொண்டிருக்கும் முக்கிய தரப்பாக இந்த நாட்டில் இருந்து வருகிறது. மகிந்த இராஜபக்ச அரசாங்கம் போலவே இன்றைய கோத்தாபாய இராஜபக்ச அரசாங்கமும் மிக வெளிப்படையாகவே சீனாவின் பக்கம் சாய்ந்ததாகவே செயற்பட்டு வருகிறது.

உண்மையில் இந்த நாட்டின் பொருண்மியத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நியாயமான நல்ல திட்டங்களைக் கூட, சீனாவின் தேவைகளுக்காகவும் சீனாவை திருதிப்படுத்துவதற்காவும், இந்த நாட்டின் அமைவிடம் காரணமாக கிடைத்த புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை கூட சீனாவுக்கு விட்டுக் கொடுக்கின்ற அளவுக்கு, இந்த அரசு மிக வெளிப்படையான சீன சார்பு நிலையை எடுத்து இருக்கிறது. அதைத்தான் நாம் இங்கு கேள்விக்குட்படுத்த விளைகிறோம்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்திலும் ஒரு புவிசார் அரசியல் (அமெரிக்க எதிர் சோவியத்) போட்டியொன்று நிலவியிருந்தது. அதன்போது, ஜே ஆர் ஜெயவர்த்ன அமெரிக்க சார்பு நிலைப்பாடு எடுத்திருந்தார். அந்த நேரத்தில் நிலவிய பூகோள அரசியல் போட்டியில், சிறிலங்கா மென்மேலும் இந்தியாவுக்கு மாறாக அமெரிக்க சார்பு நிலைக்கு செல்லாது தடுப்பதற்கான ஒரு உத்தியாக, எமது அண்டை சக்தியான இந்தியா (சோவியத் சார்பு), தமக்கான பிடிமானமாக, தமிழர்களது ஆயுத போராட்டதையும் ஆதரித்திருந்தது . அதுதான் உண்மையில் அப்போதைய யதார்த்தம். அப்போதைய பனிப்போர் காலத்தில், இலங்கையானது அமெரிக்க சார்பாக சென்று விடாமல் தடுப்பதற்கு இந்த பிராந்திய வல்லரசானது வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தது. அதனால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை இந்தியா தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியது. இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான கருவியாக ஆயுதப் போராட்டத்தை பயன்படுத்தியது. அதுவே உண்மை நிலவரம்.

அதேபோல, இன்று இப்பிராந்தியத்தில் காணப்படும் வலுச் சமநிலையை சவாலுக்குட்படுத்தி தன் பக்கத்திற்கு திருப்ப முயலும் ஒரு தரப்பை, இந்தப் பிராந்திய வல்லரசின் மேலாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தும், அந்த வல்லரசுத்தரப்பை இந்த நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

அதை தான் நாம் எதிர்க்கிறோம். உண்மையில் புவிசார் அரசியலை மையப்படுத்தி நீங்கள் ஆடி வருகின்ற நடவடிக்கைகளால் இந்த தீவில் வேறு எவரையும் விட, தமிழர் தேசமே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எமது தேசம் மீண்டும் மீண்டும் இப்படியான ஒரு பாதிப்பை எதிர்கொள்வதை நாம் விரும்பவில்லை. அதனால் தான் எமது அரசியல் கட்சி இந்த சட்டமூலத்தை எதிர்க்கிறது.

இன்னுமொரு முக்கியமான துரதிஷ்டவசமான ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் .
அது தான் இனவாதம். அது தான் வகுப்புவாதம். அது தான் ஒரு துரதிர்ஷ்டவசமாக, இந்த அவையிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் இதனையே விரும்புகிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தை உச்ச நிலையில் இருந்த போது, விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு நிலப்பரப்பை அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது, மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடரும் வகையில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டது.

அப்போதைய அரசாங்கம் சமஷ்டி முறையைக் கொண்டு வருவது பற்றிச் சிந்திப்பதாக உத்தியோகபூர்வமான முறையில் அறிவித்திருந்தது.

இத்தகைய புறச்சூழலிற்தான் விடுதலைப்புலிகள் இவ்வாலோசனையினை முன் வைத்திருந்தனர்.
ஆனால், அதனை நீங்கள் நிராகரித்திருந்தீர்கள். அதை ஒரு இடைக்கால ஏற்பாடாக கூட நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரற்று அதை நிராகரித்திருந்தீர்கள். தமிழ் மக்கள் ஏதோ ஒருவகையில் ஒரு சிறிதளவேனும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்கு எம்மை அழிக்கக் கூடத் துணிந்தீர்கள்.
அதற்கு எம்மினத்தின் மீது இனவழிப்புச் செய்வதனை உங்கள் தெரிவாக எடுத்தீர்கள் .

ஆனால், இன்றைக்கு வேறு தேவைகளுக்காக அதுபோன்ற ஒரு அலகினை உருவாக்குவது தொடர்பில் உங்களிடம் எதுவித வெட்கமோ தயக்கமோ காணப்படவில்லை.

புவிசார் அரசியலில் போட்டித்தரப்புகளில் ஒரு தரப்பினர் மேலாதிக்கம் பெறுவதற்கு வழிவகை செய்யும் வகையில் இதனை மேற்கொள்கிறீர்கள். (அன்று தமிழர்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக எதிர்த்த நீங்கள், இன்று வேறு வல்லரசு சக்திகளின் தேவைகளுக்காக இதை ஆதரிக்கிறீர்கள்.) இதுதான் இந்த அவையின் இனவாதம். இதன் காரணமாகவே நாங்கள் இந்தச் சட்ட மூலத்தை எதிர்க்கிறோம்.

இன்று இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த முரண் நிலையை இந்த அவலமான நிலமையை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்.