மூக்கு வழி செலுத்தும் தடுப்பு மருந்து குழந்தைகளிடம் கொரோனா தொற்றைக் குறைக்கும்

”இந்தியாவில் தயாரிக்கப்படும், மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தால், குழந்தைகள் இடையே கொரோனா தொற்று பரவலை எளிதாக கட்டுப்படுத்த முடியும்,” என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையில், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ‘மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர்’ என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவில், 12 – 17 வயது வரையிலானவர்களுக்கு, ‘பைஸர்’ தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு, அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்கனவே அனுமதி அளித்து உள்ளது. மேலும், 2 – 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த, செப்டம்பரில் பைஸர் நிறுவனம் அனுமதி கோர திட்டமிட்டுள்ளது. கனடா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், 12 – 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு பைஸர் தடுப்பூசி போட அனுமதி அளித்து உள்ளன.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியும், குழந்தைகள் நல நிபுணருமான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது: மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணி, இந்தியாவில் தீவிரமாக நடக்கிறது; இது அடுத்த ஆண்டு தான் பயன்பாட்டுக்கு வரும். அதற்குள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

சமூக பரவல் கட்டுக்குள் வந்ததும் பள்ளிக்கூடங்களை திறக்கலாம். கட்டுக்குள் வரும் பல்வேறு நாடுகளும் இந்த வழிமுறையை பின்பற்றித்தான் பள்ளிக் கூடங்களை திறந்தன. மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்து, குழந்தைகளின் மூச்சு குழாயில் தொற்று ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்ததும், குழந்தைகளுக்கு தொற்று பரவுவது கட்டுக்குள் வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.