சிவகார்த்திகேயனின் வீட்டுத் தோட்டம்: வைரலாகும் வீடியோ (Video)

கொரோனா காலத்தில் எல்லா இடங்களிலும் வீட்டு தோட்டம் செய்யும் நிலை அதிகரித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்து பிரபலங்கள் மத்தியில் தோட்டக்கலை மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. இயற்கை வாழ்வியலுக்கு மக்கள் திரும்பி வருகிறார்கள். பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, நடிகை சுகாசினி, சமந்தா உள்ளிட்டவர்களின் மாடித் தோட்டம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது.

அந்த வரிசையில் கோலிவுட்டின் இளம் நடிகரான சிவகார்த்திகேயனும் தங்கள் வீட்டுத் தோட்டத்தை வீடியோவாக சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். முழுக்க பசுமை நிறைந்த வீட்டுத் தோட்டமாகக் காட்சியளிக்கிறது. கடந்த லாக்டவுன் நேரத்தில் இந்தத் தோட்டம் உருவாக்கும் ஐடியா சிவகார்த்திகேயனுக்குத் தோன்றியிருக்கிறது. உடனடியாக பசுமைத் தோட்டத்தை அமைத்ததாகவும், அவரே அதை முழுவதுமாகப் பராமரித்து வருவதாகவும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் வீட்டுக்குத் தேவையான காய்கறி, கீரை உள்ளிட்டவற்றை தன் தோட்டத்தில் விளைவித்து உபயோகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். வீட்டுத் தோட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாகவும் பூரிப்புடன் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த காணொலியைப் பார்த்து மக்கள் அனைவரும் தோட்டம் அமைப்பதில் ஆர்வம்காட்ட வேண்டும் என்பதே சிவகார்த்திகேயனின் ஆசையாம்.

கொரோனா சூழலுக்குப் பிறகு, பிரபலங்களில் தொடங்கி மக்கள் வரை அனைவருமே மாடித் தோட்டம் , காய்கறி, கீரை வளர்ப்பில் ஆர்வம்காட்டத் தொடங்கிவிட்டனர். பிரபலங்களின் தொடர்ச்சியான இந்த வீடியோ பதிவுகள் மக்களை இன்னும் ஊக்கப்படுத்தும்.