பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம்: மேலும் ஒரு பதக்கமும் வசம் (Photos)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது இடம்பெற்று வரும் டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டி-2020 போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையுடன் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து குறித்த சாதனையைப் படைத்துள்ளார்.

இலங்கையின் கெக்கிராவப் பகுதியைச் சேர்ந்த 35 வயதான தினேஷ் பிரியந்த கடந்த- 2004 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்தார்.2008 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் உபாதையடைந்தமையைத் தொடர்ந்து இராணுவத்தின் ஈட்டி எறிதல் போட்டிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

கடந்த-2016 இல் பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டிருந்தார்.

2017 ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளில் அவர் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கும்,தினேஷ் பிரியந்தவிற்கும் கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

பரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டித் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த சார்ஜன்ட் தரத்திலிருந்து வொரன்ட் அதிகாரி 1 தரத்துக்குத் தரமுயர்த் தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, பரா ஒலிம்பிக் 2020 போட்டிகளில் இலங்கைக்கு மேலுமொரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

F64 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சமித்த துலான் கொடிதுவக்கு 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

கடந்த-2019 இல் துபாயில் இடம்பெற்ற உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் நான்காம் இடத்தைப் பெற்றதுடன் 2018 ஆசிய பரா விளையாட்டுத் தொடரிலும் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.