அளவெட்டி தந்த ஒப்பற்ற நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன் காலமானார் (Photo)

யாழ்.அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல நாதஸ்வர வித்துவான் எஸ். சிதம்பரநாதன் இன்று வெள்ளிக்கிழமை(03.08.2021) காலமானார்.

நாதஸ்வர வித்து வான் சிதம்பரநாதன் தவிற்காரர் செல்லத்தரையின் புத்திரானாவார்.இவர் தமது நாதஸ்வரக் கலையைக் அளவெட்டி கும்பழாவளை ஆலயத்தில் இளமைப் பருவத்திலேயே ஆரம்பித்தவர்.

இவர் தனது இளமைக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார்.பின்னர் இந்தியாவுக்குச் சென்று பிரபல வித்துவான்களிடம் நாதஸ்வரப் பயிற்சி பெற்றார். பின்னர் வெளியூர்க் கலைஞர்களிடமும் இசைப் பயிற்சி பெற்றார். இசைத் துறையில் கேள்வி ஞானம் பெற்றுயர மாமனார் கணேசரத்தினத்தின் உதவி இவருக்குப் பெரிதும் பயன்பட்டது.

“நாதஸ்வர இளந்தென்றல்” என்ற விருதினை இளமைக் காலத்திலேயே தனதாக்கிய இவரது கடின முயற்சி மற்றும் விடா முயற்சியினால் குறுகிய காலத்திலேயே நாதஸ்வரக் கலையில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார். பிரபல நாதஸ்வர மேதையாக ஈழ மண்ணிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் வலம் வந்தார்.

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் கலைஞர்களுக்கான கலாபூஷண விருது உட்படப் பல விருதுகளையும், பட்டங்களையும், பாராட்டுக்களையும்,கெளரவிப்புக்களையும் சிதம்பர நாதன் தனதாக்கியுள்ளார்.

இவரது மகன் ஜலதரன் வயலின் வாத்தியக் கருவியை இந்திய இசைக் கல்லூரிகளில் கற்றுப் பலராலும் பாராட்டப்படும் இசை நிகழ்வுகளைத் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றார்.

மனங்களை மயக்கும் இனிய நாதஸ்வர இசையால் அனைவரது மனதிலும் இடம்பிடித்த நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன் அளவெட்டி தந்த ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞர். இவர் மறைந்தாலும் இவரது நாதஸ்வர இசை எம் காதுகளில் என்றும் இனிமையாக ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

(செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்)