நல்லூர்க் கந்தன் சப்பரத் திருவிழா நாளில் முருகப் பெருமானின் அருட்காட்சி (Photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் 23 ஆம் நாள் சப்பரத் திருவிழா நாளில் இன்று சனிக்கிழமை(04.09.2021)பிற்பகல் பெரிய இடப வாகனத்தில் முருகப் பெருமான் திருக்காட்சி கொடுத்தார்.

வருடம் தோறும் இவ்வாலய வருடாந்த மகோற்சவப் பெருந் திருவிழாவின் சப்பரத் திருவிழா நாளில் உலகிலேயே மிகவும் பழமையானதும், அதி உயரமுமானதுமான நல்லைக் கந்தன் சப்பரத்தில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் சூழ நல்லூர் வேற்பெருமான் வள்ளி- தெய்வயானை நாயகியருடன் வெளிவீதி உலா வரும் காட்சி வியத்தகு பேரின்பக் காட்சி.

எனினும், நாட்டிலும்,யாழிலும் அதிகரித்து வரும் கொரோனாப் பெருந் தொற்றுக் காரணமாக இவ்வருடம் இவ்வாலயத்தின் மஹோற்சவத் திருவிழாக்கள் யாவும் ஆலய சிவாச்சாரியார்கள்,ஆலய நிர்வாகம் மற்றும் நல்லூரான் தொண்டர்கள் சிலருடன் மாத்திரம் சுவாமி உள்வீதி உலாவுடன் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இவ்வாலய சப்பரத் திருவிழா நாளான இன்று பிற்பகல் தம்ப பூசை, வசந்த மண்டபத்தில் விசேட பூசை வழிபாடுகள், தீபாராதனை என்பன இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தங்கம் போல் ஜொலி ஜொலிக்கும் பெரிய இடப வாகனத்தில் அலங்கார நாயகனாக வேற்பெருமானும், வெள்ளை இடப வாகனங்களில் முருகப் பெருமானின் இரு பெரும் சக்திகளான வள்ளி, தெய்வயானை நாயகியரும் மெல்ல மெல்ல உள்வீதி உலா வலம் வந்த காட்சி அற்புதமானது.

மந்த மாருதமான மாலை வேளையில் கற்பூர ஜோதிகள் முன்னே வர தங்க ஆபரணங்கள், மலர்மாலைகள் அழகன் முருகனுக்கு மேலும் அழகு சேர்க்க நல்லூரான் வீதி உலா சிறப்புற இடம்பெற்று நிறைவேறியது.

(சிறப்புத் தொகுப்பு:-செ. ரவிசாந்)