யுத்தக் குற்றங்கள் விவகாரம்: கூட்டமைப்பு யாரைப் பாதுகாக்க முற்படுகின்றது? சுகாஸ் சாட்டையடி! (Video, Photo)

இலங்கை அரசு தனது படைகள் யுத்தக் குற்றங்களிலேயோ இனப்படுகொலை நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை என மறுக்கின்ற நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தாங்களாகவே வலியச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களையும் விசாரிக்க வேண்டுமெனக் கோருவது யாரைப் பாதுகாப்பதற்கு? எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், கட்சியின் சட்ட ஆலோசகருமான கனகரத்தினம் சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(05.09.2021) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாப் பேரிடர் அதிகரித்திருக்கின்ற தற்போதைய நிலையிலும் தமிழின நலன்களுக்கு முரணாகச் செயற்பட்டுத் தமிழ்மக்களை அடகு வைக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பவிருக்கின்றது. அந்தக் கடிதத்தில் அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் செய்த யுத்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. உண்மையில் இது கடந்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் செய்த நடவடிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துகின்ற,காட்டிக் கொடுக்கின்ற தொடர்ச்சியான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதை மீண்டுமொருமுறை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

எந்தவொரு இனத்திலாவது தனது இனத்துக்காகச் செயற்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரிய சம்பவங்கள் நடந்திருக்கின்றதா? எனவும் அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ். ரவி)