யாழில் கொரோனாத் தொற்று நிலைமை குறையவில்லை! (Photo)

தற்போது யாழ் மாவட்டத்தில் கொரோனாத் தொற்று நிலைமை இன்னும் சரியான முறையில் குறைந்தபாடாக இல்லை எனத் தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கடந்த சில நாட்களில் குறைந்து செல்லும் போக்கைக் காட்டியது. எனினும், தற்போது ஏற்ற இறக்கமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை(08.09.2021) யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று(07) மாலை-04 மணிக்குப் பின்னர் கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தமாக 248 நபர்கள் மேலதிகமாக கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் இதுவரையான காலப் பகுதியில் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 192 ஆகத் தற்போது அதிகரித்துள்ளது.

இதுவரை யாழ். மாவட்டத்தில் 281 கொரோனா இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இன்றுவரை கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்பு கொண்ட வகையில் 5384 குடும்பங்களைச் சேர்ந்த 15,464 நபர்களை நாங்கள் சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தியுள்ளோம்.

மருதங்கேணியில் 3 கிராமப் பகுதிகளும், வேலணையில் ஒரு கிராமப் பகுதியுமாக 4 கிராமங்கள் தற்போது முடக்கத்திலிருக்கின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)