தமிழர் தரப்புக் குரலாக ஐ. நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை அனுப்பியது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இன்று புதன்கிழமை(08.09.2021) ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்புக் குரலாக நீண்ட அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த அறிக்கையில்,

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவைப் பாரப்படுத்துவதே தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரே வழி.

காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பது சிறிலங்கா அரசின் வெறும் ஏமாற்றுத் தந்திரமே.

தொடரும் அடக்குமுறைகளைக் கண்காணிக்க மனித உரிமை ஆணைக்குழு ஒரு விசேட தூதுவரை நியமிக்க வேண்டும்.

வடக்கு- கிழக்கில் மனித உரிமை ஆணையகத்தின் ஒரு கள அலுவலகம் திறக்கப்பட்டுத் தொடரும் அடக்குமுறைகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

இராணுவமயமாக்கல் பல்வேறு பரிணாமங்களில் நடந்து தமிழ்மக்களின் இருப்புத் தற்போதும் கேள்விக்க்கு உள்ளாக்கப்படுவது குறித்து ஐ நா பிரேரணை கவனத்தில் எடுக்காமை மிகுந்த கவலைக்கு உரியது. இது குறித்து ஐ நா கவனம் செலுத்த வேண்டும்.

சிறிலங்காவின் நடைமுறை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக கூட கருதப்பட முடியாதது.

சிறிலங்கா பல்தேசக் கட்டமைப்புக் கொண்ட நாடாக உருவாகக் கூடிய , தமிழர்களின், தமிழ்தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு அரசியலமைப்பு மூலமே தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் உள்ளிட்ட பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:-எஸ்.ரவி)