தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் நீண்டகாலம் பணி செய்த அருளையாவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம் (Photos)

யாழ்.சுன்னாகம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும்,மல்லாகத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா அருளையா நேற்று ஞாயிற்றுக்கிழமை(19-09-2021) தனது 85 ஆவது வயதில் யாழில் காலமானார்.

மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி வித்தியாலயத்தின் ஓய்வுநிலை அதிபரான அருளையா பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாக சபையில் கடந்த- 43 ஆண்டுகளாக உறுப்பினராகவும், உதவிச் செயலாளராகவும் சிறப்பாகப் பணிகள் ஆற்றியுள்ளார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை(20-09-2021)முற்பகல் மல்லாகத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது அஞ்சலி உரைகளும்,மெளன அஞ்சலிப் பிரார்த்தனை உரைகளும் இடம்பெற்றன.

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும்,பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், சைவப்புலவர் கந்த சத்தியதாசன், வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் உள்ளிட்ட பலரும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி உரைகள் ஆற்றினர்.

அதனைத் தொடர்ந்து அவரது பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நண்பகல்-12 மணியளவில் வலி.வடக்கு கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது.

(செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்)