இரண்டாவது நாளாகவும் 1000 இற்கும் குறைவான கொரோனாத் தொற்றாளர்கள்!

கொரோனாத் தொற்று உறுதியான மேலும் 932 பேர் இன்று செவ்வாய்க்கிழமை (28.09.2021) அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 515,524 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 46,651 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 743 பேர் இன்றைய தினம் குணமடைந்தனர்.

நாட்டில் 112 நாட்களின் பின்னர் நாளொன்றில் 1000 இற்கும் குறைவான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்றுத் திங்கட்கிழமை(27.09.2021) பதிவாகியிருந்தது. அந்தவகையில் 983 கொரோனாத் தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்தது.

இதேவேளை, நாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை(27) கொரோனாத் தொற்றால் 55 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும், 26 பெண்களும் உள்ளடங்குகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.