குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் நவராத்திரியும் சதுர்த்தி விசேட வழிபாடும் (Video, Photos)

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கடந்த வியாழக்கிழமை(07.10. 2021) முற்பகல்-10 மணியளவில் கும்பம் வைத்தல், பூசை வழிபாடுகளுடன் நவராத்திரி வழிபாடுகள் ஆரம்பமாகித் தொடர்ந்தும் ஏனைய தினங்களில் இடம்பெற்று வருகிறது.

நவராத்திரி தினங்களில் தினமும் அபிராமிப் பட்டர் அருளிய அபிராமி அந்தாதி ஓதப்பட்டு முற்பகல்-11 மணியளவில் நவராத்திரிப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றுக் குமரகுருபரர் அருளிச் செய்த சகலாவல்லி பாமாலை ஓதுதலும் நடைபெற்று வருகிறது.

கடந்த சனிக்கிழமை(09) சதுர்த்தியை முன்னிட்டு சிவபூமி ஆச்சிரம முன்றலில் எழுந்தருளியுள்ள விநாயகர் திருவுருவச் சிலைக்கு முன்பாக விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றது. முற்பகல்-11.15 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களால் விசேட அபிஷேக வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து நவராத்திரி வழிபாடுகளும் இடம்பெற்றது.

இறுதியில் அடியவர்களுக்குப் பொங்கல், அவல், பஞ்சாமிர்தம் ஆகிய நைவேத்தியங்கள் பரிமாறப்பட்டன.

இதேவேளை, நாட்டில் நிலவி வரும் கொரோனாத் தொற்று நிலைமைகள் விரைவில் முழுமையாக நீங்க வேண்டியும் இதன்போது பிரார்த்தனை செய்யப்பட்டது.

(செய்தித் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)