தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் நவராத்திரி விழா: முப்பெரும் தேவியரும் அருட்காட்சி (Photos)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த நவராத்திரி விழா கடந்த-07 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல்-12 மணியளவில் கும்பஸ்தானத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து பிற்பகல்-03 மணியளவில் சாயரட்டைப் பூசை இடம்பெற்று வசந்தமண்டபத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

நவராத்திரி காலப் பகுதியில் தினமும் பிற்பகல்-03 மணியளவில் வசந்தமண்டபத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு இவ்வாலய வசந்தமண்டபத்தில் அழகிய கொலு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலய நவராத்திரி விழாவில் எதிர்வரும்-15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விஜயதசமி நன்னாளன்று காலை-08 மணியளவில் பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மானம்பூத் திருவிழாவும் (வாழை வெட்டு) நடைபெறும். காலை-09 மணியளவில் சிறார்களுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வு ஆரம்பமாகும்.

இதேவேளை, இந்தியாவின் கும்பகோணத்திலிருந்து அண்மையில் தருவிக்கப்பட்ட ஐம்பொன்னாலான சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவியரின் உருவச் சிலைகள் வசந்தமண்டபத்தில் அருட்காட்சி வழங்குவது இவ் வருட இவ்வாலய நவராத்திரி விழாவின் விசேட அம்சமாகும். ஏற்கனவே இவ்வாலய வசந்தமண்டபத்தில் துர்க்கை அம்பாளின் உருவச் சிலை அருட்காட்சி தரும் நிலையில் இவ்வருட நவராத்திரி விழாவின் ஆரம்பநாள் முதல் வசந்தமண்டபத்தில் அடியவர்கள் முப்பெரும் தேவியர்களையும் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

விஜயதசமி நன்னாளன்று மாலை வேளையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஊர்வலமாக துர்க்கை அம்பாள் ஆலயத்தை வந்தடைந்து அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் ஆலய முன்றலில் வாழைவெட்டு இடம்பெறும். குறித்த நிகழ்வு நீண்டகாலமாகப் பாரம்பரியமாகத் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் பாரம்பரியமாக நவராத்திரி வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாலயம் சிறிய குடிசையாகவிருந்த காலப் பகுதியிலேயே அக்காலப் பகுதியில் யாழ். மாவட்டத்திலேயே ஒரேயொரு துர்க்கை அம்பாள் ஆலயமாக இவ்வாலயம் அமைந்திருந்தமையால் நவராத்தி காலப் பகுதியில் பல இடங்களிலிருந்தும் அடியவர்கள் வருகை தந்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)