பருத்தித்துறையில் பதிவானது அதிகூடிய மழைவீழ்ச்சி! (Photo)

இந்த வருடத்தின் இதுவரையான மழைவீழ்ச்சி நிலவரப்படி யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறையில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 200.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

கடந்த-10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-08.30 மணி தொடக்கம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மழை வீழ்ச்சி நிலவரப் படி மேற்படி பகுதியில் குறித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் 900.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்றுத் திங்கட்கிழமை(11.10.2021) காலை-08.30 மணியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை(12.10.2021) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியால மழை வீழ்ச்சி நிலவரப் படி திருநெல்வேலி வானிலை ஆய்வுநிலைய எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)