விஜயதசமி நாளன்று மாவைக் கந்தன் துர்க்காதேவி ஆலயத்துக்கு எழுந்தருள மாட்டார்!

விஜயதசமி நன்னாளன்று மாலை வேளையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஊர்வலமாகத் துர்க்கை அம்பாள் ஆலயத்தைச் சென்றடைவதும், அதனைத் தொடர்ந்து துர்க்காதேவி ஆலய முன்றலில் மானம்பூத் திருவிழா(வாழை வெட்டு) இடம்பெற்று மாவைக் கந்தன் அங்கு இளைப்பாறிச் செல்வதும் மிக நீண்டகாலமாகப் பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது.

எனினும், தற்போது நிலவும் கொரோனாத் தொற்று நிலைமைகள் காரணமாக விஜயதசமி நன்னாளான நாளை வெள்ளிக்கிழமை(15.10.2021) மாவைக் கந்தன் வழமை போன்று துர்க்காதேவி ஆலயத்திற்கு எழுந்தருள மாட்டார் எனத் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை காலை-08.30 மணியளவில் துர்க்காதேவி ஆலயத்தில் சிறார்களுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வு ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)