ஆறு மாதங்களின் பின் பிணையில் விடுதலையானார் ரிஷாட் பதியுதீன் எம்.பி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு இரண்டு வழக்குகளிலும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சுமார் ஆறு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் பதியுதீனைத் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவு பிறப்பித்தார்.

இதுதொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (14.10.2021) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, ஆறது வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஹிஷாலினி உயிரிழந்தமை தொடர்பிலும் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் ஐந்தாவது பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றிலும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த வழக்கிலும் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரிஷாட் பதியுதீன் வௌிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு மேலதிக நீதவான் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.