யாழ்.ஏழாலையில் பிறந்து கொழும்பில் கல்விப் பரம்பரையை உருவாக்கிய ஆசிரியை திருமதி.டெய்ஸி மனோகரன் நினைவுகள் (Photos)

கொழும்பு வெஸ்லி கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியை திருமதி. டெய்ஸி பற்றிமா மனோகரன் கடந்த 09.09.2021 அன்று கொழும்பில் காலமானார். அம்மையார் காலமாகி இன்று செவ்வாய்க்கிழமையுடன்(09.11.2021) 60 நாட்களாகின்றன.

09.08.1951 இல் யாழ்.ஏழாலை மத்தியில் அருளப்பு ஞானம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியாகப் பிறந்த இவர் தனது இளமைக் காலத்தில் இளமைத் துடிப்பும், கல்வியறிவும் மிக்கவராகத் திகழ்ந்தார்.

யாழ்.திருக்குடும்ப கன்னியர்மடத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அம்மையார் பின்னர் கொழும்பு பல்கலைக்கழக வர்த்தகத்துறைப் பட்டதாரியானார். இதன்பின்னர் கல்வி டிப்ளோமா பட்டப்பின் படிப்பையும் பூர்த்தி செய்து கொண்டார்.

கொழும்பு மாநகரில் வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் பிரபல்யமான பாடசாலையான கொழும்பு வெஸ்லி கல்லூரியின் க.பொ. த சாதாரணதரம் மற்றும் க. பொ. த உயர்தர வகுப்புக்களுக்கான வர்த்தகத் துறை ஆசிரியையான அம்மையார் மேற்படி கல்லூரியில் 25 வருட நீண்டகால ஆசிரிய சேவையைப் பூர்த்தி செய்து 31.08.2007 அன்று ஓய்வுபெற்றார். இவரது அர்ப்பணிப்பு மிக்க ஆசிரிய சேவைகளைப் பாராட்டி 21.08. 2004 ஆம் ஆண்டு கொழும்பு வெஸ்லி கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பிலும், ஆசிரியர் சங்கத்தின் சார்பிலும் பெரியளவில் இரு விழாக்கள் நடாத்தப்பட்டன.

மேற்படி கல்லூரியின் நீண்டகால அர்ப்பணிப்பு மிக்க சேவைகளின் மூலம் திருமதி. டெய்ஸி பற்றிமா மனோகரன் கல்விப் பரம்பரையொன்றையே தோற்றுவித்துள்ளாரென்பது எமக்குப் பெரும் மனநிறைவைத் தருகின்றது எனக் கல்லூரியின் பழைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்மையாரின் ஆசிரியப் பணி சிறப்படைவதற்கு அவரின் கணவரின் ஊக்கமளிப்பே பிரதான காரணம் என அடிக்கடி ஆசிரியை திருப்தியுடன் கூறுவதை இந்தத் தருணத்தில் இங்கு நினைவு கூருகின்றோம்.

மனிதநேயமும், சேவை மனப்பான்மையும் மிக்க யாழ்.சுண்டுக்குளி மனோகரனைக் கரம் பிடித்து இனிமையான இல்லற வாழ்வின் பயனாக மரினா மனோஜினி, டியனா பிறின்சி எனும் இரு அருமைச் செல்வங்களைப் பெற்றெடுத்த அம்மையார் தனது கணவரின் துணையுடன் அவர்களை வளர்த்துக் கல்வியறிவிலும், கலாசாரத்திலும், பாசத்திலும் பாக்கியவதிகள் ஆக்கினார். அவர்கள் திருமண வாழ்வில் இணைய நல் அன்னையாகவிருந்து வழிகாட்டிப் பேரப்பிள்ளைகளுடன் அன்பு கூடி இருந்தார்.

அகில இலங்கை சமாதான நீதவனாகவிருந்து அவரது கணவரான லயன் மனோகரனுடன் இணைந்து தந்தை செல்வா நற்பணிமன்றச் செயற்பாடுகளில் சமூகத்துடன் தன்னை அர்ப்பணித்தார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் திருவாக்குக்கு அமைய வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த அம்மையாரின் ஆத்மாசாந்தியடைய இந்நாளில் எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திக்கின்றோம்.

தொடர்புகளுக்கு:-
கணவர்- லயன் அ.பி.யோ.மனோகரன் (சமாதான நீதவான்),
104/18 ஏ, சங்கமித்தை மாவத்தை,
கொழும்பு-13.
தொலைபேசி இலக்கம்- 0771808521.