யாழ்.பல்கலைக்கழகத்தில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு நிறைவு: ஓர் சிறப்புப் பார்வை (Videos, Photos)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(16.11.2021) காலை-09 மணியளவில் ஆரம்பமானது.

“பன்முக நோக்கில் சங்க இலக்கியம்” எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமான குறித்த ஆய்வு மாநாடு இன்று புதன்கிழமையும்(17.11.2021) காலை,மாலை அமர்வுகளாக இடம்பெற்றது.இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சூழல் விழாக் கோலம் பூண்டிருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் நேற்றைய ஆரம்பநாள் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்களின் மங்கல விளக்கேற்றல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிய விழாவில் வரவேற்புரையைப் பேராசிரியர் கி.விசாகரூபன் நிகழ்த்தினார்.

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும், மேற்படி ஆய்வு மாநாடு நடைபெறுவதற்கு வழிசமைத்துக் கொடுத்தவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆசியுரை ஆற்றினார். அவரது உரை சிந்திக்க வைப்பதாக அமைந்திருந்தது.

தொடர்ந்து தலைமையுரை, பிரதமவிருந்தினர் உரை,சிறப்பு விருந்தினர் உரைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ்மொழிக்கும் பெரும் தொண்டாற்றிய புலமையாளர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையால் சிறப்புக் கௌரவங்கள் வழங்கப்பட்டன.

அந்தவகையில் ஊர்காவற்துறை நாரந்தனையைச் சேர்ந்த தமிழிலும், சைவ இலக்கியங்கள், தத்துவங்களிலும் ஆழ்ந்த புலமை கொண்ட பண்டிதர் க.ஈஸ்வரநாதபிள்ளை, 30 இற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை எழுதியவரும், மானவர்களுக்கெனப் பல படைப்புக்களைத் தந்தவருமான இணுவிலைச் சேர்ந்த பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை, தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் மிகுந்த புலமையுடைய வட்டுக்கோட்டை சிந்துபுரத்தைச் சேர்ந்த பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன், தமிழ் இலக்கியத்தில் மரபு, நவீனம் ஆகிய இரண்டிலும் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவரான அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பண்டிதர் கலாநிதி- செல்லையா திருநாவுக்கரசு ஆகியோருக்குப் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சிறப்புக் கெளரவங்களை வழங்கிக் கெளரவித்தார்.

மேற்படி விழாவில் கலந்து கொள்ளாத ஈழத்து மரபுவழிக் கல்வி ஆளுமைகளில் முக்கியமான மூத்த ஆளுமையாக விளங்கும் பண்டிதர் கதிரிப்பிள்ளை உமாமகேஸ்வரம்பிள்ளை, தமிழுக்கும், சைவத்துக்கும் அளப்பரிய பணிகள் ஆற்றிய பண்டிதர். மு.சு.வேலாயுதபிள்ளை, 25 இற்கும் மேற்பட்ட இசைப் பாடல்களை எழுதியவரும், தமிழ் அகராதி உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்தவருமான பண்டிதர் வீ.பரந்தாமன் ஆகிய புலமையாளர்களுக்கான கெளரவங்கள் அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்படும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புலமையாளர்களுக்கான அறிமுக உரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ந.செல்வ அம்பிகை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மீள் பதிப்புச் செய்த கிடைத்தற்கரிய தமிழ்நூல்களான மூன்று நூல்கள் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

அந்தவகையில் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிறுவர் செந்தமிழ், மட்டுவில் க.வேற்பிள்ளையின் விருத்தியுரையுடனான திருவாதவூரடிகள் புராணம், இயற்றமிழ்ப் போதகாசிரியர் ந.சுப்பையபிள்ளையின் உரைக் குறிப்புக்களுடனான தஞ்சைவாணன் கோவை ஆகிய நூல்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் வெளியீடு செய்து வைத்தார். முதற்பிரதியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பெற்றுக் கொண்டார்.நூல்களின் அறிமுகவுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஈ.குமரன் நிகழ்த்தினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மாநாட்டின் திறப்புரையைச் சிறப்புற ஆற்றினார். நன்றியுரையைப் பேராசிரியை செல்வி செ. சிவசுப்பிரமணியம் நிகழ்த்தினார்.

இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வில் விருந்தினர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், வவுனியாப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய வேந்தருமான பேராசிரியர் சு.மோகனதாஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா,பேராசிரியை கலாநிதி.மனோன்மணி சண்முகதாஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன்,பல்கலைக்கழக நிதியாளர் எஸ்.சுரேஸ்குமார்,பல்கலைக்கழகத் துறைசார் பீடாதிபதிகள்,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள்,கல்வியியலாளர்கள்,பல்துறை சார்ந்தோர்கள்,மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி ஆய்வு மாநாட்டின் மாலை அமர்வுகள் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிற்பகல்-02 மணி முதல் மாலை-04 மணி வரை பல்கலைக்கழகப் புவியியல்துறை மண்டபத்தில் சமநேரத்தில் ‘அகமும் புறமும்’ எனும் தலைப்பில் இரு அரங்குகள் இடம்பெற்றன.

குறித்த ஆய்வுமாநாட்டின் இரண்டாம் நாள் இன்று புதன்கிழமை (17.11.2021) ஆகும். அந்த வகையில் இன்று காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை மண்டபத்தில் இரு வேறு அரங்குகளாக மாநாடு இடம்பெற்றது.

வித்துவான் ந. சுப்பையா பிள்ளை அரங்கில் ‘கலைகள்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டில் பத்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட பேராசிரியர் கி.விசாகரூபன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி மாநாட்டு அரங்கிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த. அஜந்தகுமார் இணைப்பாளராகக் கடமையாற்றினார்.

சமநேரத்தில் ‘அரசியலும் பண்பாடும்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறைத் தலைவர் கலாநிதி திருமதி. சுகந்தி முரளிதரன் தலைமையில் உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை அரங்கு இடம்பெற்றது. இந்த அரங்கிலும் பத்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதேவேளை, இன்று பிற்பகல்-02 மணி முதல் 04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை மண்டபத்தில் இரு வேறு அரங்குகளாக இடம்பெற்றது. ‘வணிகமும் சூழலியலும்’ மற்றும் ‘ஆய்வுகளும் வரலாறுகளும்’ ஆகிய தலைப்புக்களில் இடம்பெற்ற மாநாட்டின் ஒரு அரங்கில் பத்து ஆய்வுக் கட்டுரைகளும் மற்றொரு அரங்கில் 12 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இன்றைய மாலை அரங்குகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இனிதே நிறைவுபெற்றது.

இரண்டு தினங்களிலும் பல்வேறு தலைப்புக்களிலும் மொத்தமாக 61 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து செ. ரவிசாந்)