யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் நாவலர் நினைவரங்கம் நாளை

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் நாவலர் நினைவரங்கம் நாவலர் குருபூசை நன்னாளான நாளை சனிக்கிழமை(27.11.2021) முற்பகல்-09.30 மணி முதல் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறும்.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க உப தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தொடக்கவுரையையும், யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் வாழ்த்துரையையும் ஆற்றுவார்.

நிகழ்வில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் உயர்தர மாணவன் சந்திரகுமார் அமலசாம் “நடையில் நின்றுயர் நாயகன் நாவலன்” எனும் தலைப்பிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவன் ஜெயபாலன் தவேதன் “எழுந்த கொழுங்கலல்” எனும் தலைப்பிலும் உரைகள் வழங்கவுள்ளனர்.

தொடர்ந்து சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஆசிரியரும், இந்துசமய ஆன்மீகப் பிரசாரகருமான செல்வி.கனகதுர்க்கா கனகரத்தினம் “நாவலர் வழி” எனும் தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)