இரத்தத் தட்டுப்பாட்டின் எதிரொலி: சுன்னாகத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் குருதிக் கொடை(Video, Photos)

யாழ்.மாவட்டத்தில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளைக் கருத்திற் கொண்டு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(28.11.2021) காலை-09 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை மேற்படி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயப் பங்குத்தந்தை அருட்தந்தை ம. அ. அன்ரன் ஜெராட் குருதிக் கொடை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து சுன்னாகம் மற்றும் அயற் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என 29 பேர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களிலும் சுழற்சி முறையில் இரத்ததானப் பணியை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாகவும், இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் மேற்படி ஆலயப் பங்குத்தந்தை அருட்தந்தை ம. அ. அன்ரன் ஜெராட் தெரிவித்துள்ளார்.

(சிறப்புத் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)