இளைஞனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டுச் சிறுப்பிட்டி கலை ஒளி கிராம மக்கள் தொடர் வீதி மறியல் போராட்டம்: இளைஞனின் சகோதரன் கைது! (Videos, Photos)

யாழ்.சிறுப்பிட்டி மேற்கு கலை ஒளி கிராமத்தில் 21 வயதான இளைஞனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அப் பகுதி மக்கள் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(30.11.2021) கலை ஒளி வீதிச் சந்தியை இடைமறித்து நீண்டநேரம் தொடர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த- 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்படி பகுதியைச் சேர்ந்த இராஜகோபாலன் இராஜஜெனோசன் என்ற 21 வயதான இளைஞன் உயிரிழந்த நிலையில் அந்த இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக இளைஞனின் குடும்பத்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்தே கிராம மக்கள் நேற்றுப் பிற்பகல்-02 மணி முதல் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘ஜெனோசனின் மரணத்திற்கு நீதி வேண்டும்’, ‘இது தற்கொலை அல்ல கொலை’, ‘கைது செய்! கைது செய்! குற்றவாளியைக் கைது செய்’ உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உயரதிகாரி மற்றும் அச்சுவேலிப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இளைஞன் பெண்ணொருவரைக் காதலித்து வந்ததாகவும், இதனைக் குடும்பத்தவர்கள் ஏற்கவில்லை எனவும், மரணத்தில் குடும்பத்தவர்களே சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களைக் கைது செய்யும் வரை தாம் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனவும் கிராம மக்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின் மரணத்தில் சந்தேகமிருப்பின் சட்டத்தரணி ஒருவர் மூலமாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்ட போதும் அதனை ஏற்க மறுத்துக் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொலிஸார் வந்த இரண்டு ஜீப் வாகனங்களையும் அங்கிருந்து செல்லவிடாது முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தவர்கள் குறித்த இளைஞனுக்கு அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும், இதனை நேரில் கண்ட சாட்சியங்களும், இளைஞன் தனது நண்பர்களுக்குத் தெரிவித்த சாட்சியங்களும் தம்மிடம் காணப்படுவதாகவும் கிராம மக்கள் பொலிஸாருக்குத் தெரிவித்த நிலையில் சாட்சியாளர்கள் உடனடியாக முன்வந்து தமக்கு சாட்சியம் அளிக்க முன்வருமிடத்து உடனடியாகவே சந்தகநபர்களைக் கைது செய்வோம் எனப் பொலிஸார் பொதுமக்களுக்குத் தெரிவித்தனர்.இந்நிலையில் அங்கு கூடியிருந்த அனைவருமே தாம் சாட்சியமளிப்பதற்குத் தயார் என ஆரவாரம் செய்தனர்.

எனினும், பொலிஸார் சாட்சியாளர்கள் சிலரை மாத்திரம் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றுவிட்டு மீண்டும் குறித்த பகுதிக்கு கொண்டு வந்து மீண்டும் விட்டுவிட்டுச் சந்தேகநபர்களைக் கைது செய்வதாகத் தெரிவித்தனர். அதுவரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் இரண்டு போக்குவரத்துப் பொலிஸாரை விட்டுவிட்டுச் செல்வதாகவும், எனவே, பொதுமக்கள் ஜீப் வாகனத்தை விடுவிக்க வேண்டும் எனவும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டனர். எனினும், அதற்குப் பொதுமக்கள் உடன்பட மறுத்து விட்டனர்.

ஒரு பொலிஸ் ஜீப் ஒருவாறு வெளியில் சென்ற போதும் மற்றைய ஜீப்பையும், பொலிஸ் அதிகாரிகளையும் அங்கிருந்து செல்லவிடாது தடுத்துப் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் தொடர் கடும் எதிர்ப்பையடுத்து நேற்று இரவு-07 மணியளவில் உயிரிழந்த இளைஞனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இளைஞனின் அண்ணணைக் கைது செய்து அச்சுவேலிப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கிராம மக்கள் சிலரும் பொலிஸ் நிலையம் சென்றனர். இதனையடுத்தே கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

(நேரடி ரிப்போர்ட், காணொளிகள் மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)